[புதன்கிழமை, 13 யூன் 2007] கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பாக தனது தவறை அரசு ஒப்புக்கொண்டு விட்டது. அரசின் சார்பில் பிரதமரே நேரடியாக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் இந்த அராஜகத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது மட்டும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை; அம்பலப்படுத்தப்படவில்லை."விசாரணை நடக்கின்றது. தவறுக்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படுவர்' என்று மட்டுமே அரசுத் தரப்பில் சமாளிப்புக் கூறப்படுகின்றது. ஆனால் "சூத்திரதாரிகள்' யார் என்பது உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவோ, கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்புகள் இல்லை. விசாரணை நடக்கின்றது என்ற பெயரோடு விவகாரம் இழுபட்டுப் போகும். அவ்வளவே. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு இதனுடன் அடங்கிவிடக்கூடாது. அரசு, மன்னிப்புக் கோரி விட்டது என்று கருதி அமுங்கி விடக்கூடாது.படையினரையும், பொலிஸாரையும் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைக்குத் தூண்டிய பொறுப்பாளிகள் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய பொறுப்பாளிகளின் வாய்மூல உத்தரவுகளை, சிரசின் மீது ஏற்று, அவற்றைச் செயற்படுத்த முயன்ற அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு சட்ட ரீதியாகத் தண்டிக்கப்படவேண்டும். அப்படி நேர்ந்தால்தான், இது போன்ற அதிகார மீறல் உத்தரவுகளை அதிகார வர்க்கம் எதிர்காலத்தில் பிறப்பிப்பது தடுக்கப்படும். இதுபோன்ற சட்ட முறையற்ற உத்தரவுகளை வாய் வழியாகப் பெற்று, அதனை செயற்படுத்தும் பிழையான வேலையை அதிகாரிகளும் நிறுத்திக் கொள்வர்.யுத்தத்தை முன்னிறுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற, அல்லது மனித உரிமை மீறல்களுக்கு துணை போகின்ற அதிகார வர்க்கத்துக்கு நல்ல பாடம் படிப்பித்துத் திருத்த இது நல்லதோர் வாய்ப்பு. அதைத் தவறவிடக்கூடாது.அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை சகல வழிகளிலும் தமிழ்ச் சமூகம் முன்னெடுக்க வேண்டும்.கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பிய நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஓர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதைஒட்டி, முக்கிய இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது என்பதும் வாஸ்தவம்தான்.ஆனால், அந்த மனுவை "மாற்றுக் கொள்கைக்கான மையம்' என்ற பொது அமைப்பே தாக்கல் செய்திருக்கின்றது. அரசின் மேற்படி அராஜகத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அத்தகையவர் சார்பான விண்ணப்பதாரி அந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை. ஆகவே, மாற்றுக் கொள்கைக்கான மையம் தாக்கல் செய்த மனுவை பொதுநலன் கருதிய ஒரு விண்ணப்பமாக மட்டுமே கவனத்தில் எடுத்து நீதிமன்றம் தீர்ப்புக்கூறும். அது கொள்கைரீதியான ஒரு வழிகாட்டலாகவே அமையும். மனுவின் விண்ணப்பதாரர் பாதிக்கப்பட்டவராக இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணம், அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியமைக்காக அதை ஏற்படுத்தியவருக்கு சட்ட ரீதியான தண்டனை என்பன அத்தீர்ப்பு மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இவ்வாறு கொழும்பிலிருந்து வல்வந்தமாக ஏற்றி அனுப்பப்பட்ட சுமார் நானூறு பேர் சார்பிலும் தனித்தனியாக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவேண்டும்.இவ்வாறு ஆட்களைப் பலவந்தமாக ஏற்றி அனுப்பியமை தவறானது என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ள பின்னணியில் மேற்படி பாதிக்கப்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளில் எதிர்மனுதாரர்களாகும் பாதுகாப்பு அதிகாரிகளுக்காக சட்டமா அதிபர் ஆஜராக முடியாத நிலைமை ஏற்படும். அந்தச் செயற்பாடு தவறானது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ள சூழலில், அந்தச் செயலை முன்னெடுத்த அதிகாரிகளுக்காக அவர்கள் செய்தது சரி என்று தெரிவித்து சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆஜராகி வாதிடுவது துர்லபம்.இந்தக் காரணத்தினால், இவ்வாறு பாதிக்கப்பட்டோர் எல்லோரும்உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தால், இந்த அராஜகத்துக்குக் காரணமான ஒவ்வொருவரும் உரிய சட்ட நெருக்கடிகளை எதிர்கொள்வர். தாம் இழைத்த தவறுக்காகத் தாங்களே குற்றத் தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்கொள்வதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும்.எனவே, இந்த அராஜகத்துக்காகக் குரல் எழுப்பிய அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளும், அரசு கோரிய மன்னிப்புடன் இந்த விடயத்தில் அடங்கி விடக்கூடாது. பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களையும் திரட்டி, உரிய சட்ட நடவடிக்கைக்கு அவர்களை வழிப்படுத்தி, உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஒரு "பட்டாளத்தை'யே கொண்டுபோய் நிறுத்தும் பணியைத் தாங்களே பொறுப்பெடுத்து முன்னெடுக்க வேண்டும். அதற்கான சட்ட ஒழுங்குகளைச் செய்யவேண்டும். அடிப்படை உரிமை மீறல் சம்பவம் ஒன்று தொடர்பாக உயர்நீதிமன்றின் நிவாரணத்தைப் பெறுவதாயின் அது நிகழ்ந்து ஒரு மாத காலத்துக்குள் நீதிமன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கால அவகாசத்தைக் கவனத்தில் எடுத்து இந்த விடயத்தில் செயற்படவேண்டும். தமிழர்களின் நியாயமான வாழ்வுக்காக உரிமைகளுக்காக இருப்புக்காக வெறுமனே நாடாளுமன்றில் கூச்சலிடுவதுடனோ அல்லது "லிப்டன்' சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுடனோ, அல்லது ஊடக அறிக்கைகளைக் காரசாரமாக விடுவதுடனோ தமிழ் அரசியல் தலைமைகளின் பணி முடிந்துவிடவில்லை. மக்களை ஒழுங்கமைத்து ஒருங்குபடுத்தி காத்திரமான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அத்தலைமைகளின் கடமையாகின்றது. அத்தகைய ஒரு பணியே இவ்வாறு பாதிப்புற்றோரை ஒருங்கு திரட்டி நீதிமன்றின் முன் கொண்டுபோய் நிறுத்தி, நியாயம் கோர ஒழுங்கு செய்வதாகும்.இதனை இதயசுத்தியோடு முன்னெடுக்க எந்த அரசி யல் தலைமை முன்வரப் போகின்றது? அதை அறியத் தமிழ்ச் சமூகம் காத்திருக்கின்றது. uthayan.
Wednesday, June 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.