[சனிக்கிழமை, 2 யூன் 2007] [virakesari.lk]
வெளியிடங்களிலிருந்து வந்து கொழும்பிலுள்ள லொட்ஜ்களில் காரணம் எதுவுமின்றி நீண்டகாலமாக தங்கியுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காரணம் எதுவுமின்றி கொழும்பில் தங்கியுள்ள இத்தகையவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதப்படுவர் என்று பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார்.
காரணமெதுவுமின்றி தங்கியுள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர ஏனையவர்களை வெளியேறுமாறு நாம் கோரவில்லை. கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தமிழர்களை வெளியேற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறான ஒரு உத்தரவினை பொலிஸார் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள லொட்ஜ்களில் தங்கியுள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டுமென பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பொலிஸ் மா அதிபர் அளித்த பதில் வருமாறு:
பதில்: அந்த தகவல் தவறானது. கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியேற வேண்டுமென பொலிஸார் தெரிவிக்கவில்லை. பொலிஸார் அவ்வாறு உத்தரவொன்றை பிறப்பிக்கவில்லை. நாம் மனித உரிமைகள் தொடர்பாக பேசுகின்றோம். மனிதன் வாழும் உரிமை முக்கியமானதாகும். இன்று மக்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள். இதன் மூலம் மக்களின் உரிமை அங்கு பறிக்கப்படுகின்றது. மக்களின் வாழும் உரிமை அங்கு பறிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக செயற்படும்போது மக்கள் வாழ்வதற்கான உரிமைகளை பறிப்பவர்களின் உரிமைகள் மீறப்படலாம்.
பலர் கொழும்பில் வெளியிடங்களிலிருந்து வந்து கொழும்பில் தங்கியிருப்பதற்கான உரிய காரணங்கள் கூறாமல் தொடர்ந்தும் நீண்டகாலமாக தங்கியுள்ளனர். சிலர் வீசா பெறுவதாகக் கூறி நீண்டகாலமாக கொழும்பில் தங்கியுள்ளனர். இவ்வாறு உரிய காரணம் இன்றி நீண்ட காலம் தங்கியுள்ளவர்களை நாங்களே பாதுகாப்பான முறையில் அவர்களை பஸ் மூலம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்போம்.
மீண்டும் அவர்களுக்கு தேவை இருந்தால் அவர்கள் கொழும்பிற்கு வரலாம். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து தேவைகளுக்காக கொழும்பிற்கு வரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. சந்தேகத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
கொழும்பிற்கு வரும் வேலை நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதன் பின்னர் நாம் அவர்களை பாதுகாப்பாக சொந்த இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி: பரவலாக கடந்த காலங்களில் தொடர்ச்சியான முறையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் உட்பட பல பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன?
பதில்: பல குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணையில் உள்ள குற்றச்செயல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்க முடியாது. காரணம் அந்தக் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடைந்து விடவில்லை. அவை இடம்பெற்று வருகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்களை கைது செய்ய முடியாத நிலைமை சில வேளைகளில் காணப்படுகின்றது.
ஒருவர் குற்றச்செயலை மேற்கொண்டு விட்டு கிளிநொச்சிக்கு தப்பிச் சென்றால் எமக்கு அவர்களை கைது செய்ய முடியாது. ஒன்று அவர் வரவேண்டும் அல்லது நாம் அந்த பிரதேசத்தினை மீட்கவேண்டும். வாகரையை நாம் மீட்ட பின்னர் அங்கு உள்ள குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் சந்தேக நபர்களை நாம் கைது செய்து வருகின்றோம்.
Saturday, June 02, 2007
கொழும்பு லொட்ஜ்களில் காரணமெதுவுமின்றி தங்கியுள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவர் - பொலிஸ்மா அதிபர்.!!
Saturday, June 02, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.