Friday, June 29, 2007

முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை: 8 மாத அவலம் தொடர்ந்தும் நீடிப்பு.!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007] முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை செய்யப்பட்டதால் கடந்த 8 மாத காலமாக பாரிய அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவ பொறுப்பதிகாரி வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: முல்லைத்தீவு மாவட்டம் என்பது நவீன வசதிகளைப் பெறுவதற்கு முடியாத அளவிற்கு மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அரசின் வசதிகள் இம் மக்களுக்குக் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. ஆனால் நீண்டகால இழுத்தடிப்புக்கு பின்னரே முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொது மருத்துவமனை கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எமது மாவட்டத்தில் வசித்து வரும் மக்களில் சுமார் 56 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இம் மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கின்றனர். இதனை விடவும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வவுனியா, மன்னார், வடமராட்சி கிழக்கு, பூநகரி, நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களும் இடம்பெயர்ந்து தற்போது எமது மருத்துவமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசித்து வருகின்றனர். இதனால் இப்போது மருத்துவமனைக்கான தேவைகள் வெகுவாக அதிகரித்துள்ளது. எந்தப் பொருட்களும் எமக்கு நிறைவாகவோ அல்லது ஓரளவிற்கோ போதுமானதாக இல்லை. அனைத்துமே பற்றாக்குறையாகவே இருக்கிறது. நோயாளர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளாந்தம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 400-க்கும் அதிகமான நோயாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு 4 மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நாளாந்தம் நான்கு மருத்துவர்கள் இந்த கடமையுடன் மருத்துவமனை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் 160-க்கும் அதிகமான நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அதிகளவு நோயாளர்களை பார்வையிடுவது சாதாரண விடயமல்ல. மிகவும் கடினமானது. போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். நாம் பெரும் நெருக்கடிகளின் மத்தியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவையாற்றினாலும் அவர்களுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களை எம்மால் வழங்க முடியாதுள்ளது. எமக்கு வேண்டிய முழுமையான மருந்துப் பொருட்களை சமாதான சூழல் இல்லாது போனதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியதே கிடையாது. முக்கியமாக இரத்த அழுத்தம், நீரிழிவு, ஏற்பு ஊசிகள் உட்பட அனைத்து மருந்துப் பொருட்களுக்குமே தட்டுப்பாடு காணப்படுகிறது. எம்மை நம்பி நீண்ட தொலைவில் இருந்து வருகின்ற நோயாளர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டு மருந்துப் பொருட்களை வெளியில் பெற்றுக்கொள்ளுமாறு எழுதி வழங்க வேண்டிய நிலையே எமக்கு இருக்கிறது. மருத்துவமனையில் இல்லாது தனியார் மருந்து விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு நாம் வழங்குகின்ற மருந்துகள் அவர்களிடமும் இல்லை. இதனால் நோயாளர்கள் தமது நோய்க்கான மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால் வன்னியில் நோயாளர்கள் மிகப்பெரும் அவலத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலை தொடருமாக இருந்தால் மிகப்பெரும் அவலம் உருவாகும். எரிபொருள் பற்றாக்குறை முல்லைத்தீவு பொது மருத்துவமனையைப் பெறுத்த வரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முகமாலையில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து வன்னிக்கான பெருளாதாரத் தடை முழுமையாக இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எமக்கு கிடைக்க வேண்டிய மருந்து மற்றும் எரிபொருள் உட்பட மருத்துவமனையின் முக்கிய பயன்பாட்டுப் பொருட்கள் தேவையான அளவில்கூட கிடைக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தியும் சிலவற்றை வழங்காமலும் விட்டுள்ளது. எரிபொருள் எங்களுக்கு சிறிய தொகை கூட தரப்படுவதில்லை. மாதம் தோறும் எமக்கு 5,000 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. இத்தொகையில் சிறிய அளவுகூட எங்களுக்கு தரப்படுவதில்லை. இதனால் மருத்துவமனை இரவு நேரங்களில் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பகல் நேரங்களிலும் அவசர சிகிச்சைகளுக்கும் சத்திர சிகிச்சைகளுக்கும் மின்சாரம் முக்கியமாக தேவைப்படுகிறது. எட்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டே நோயாளர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். நோயாளர் காவு வாகனம் பெருந்தொகையான நோயாளர்கள் நாள்தோறும் சிகிச்சைகளுக்கு வருவதால் மேலதிக சிகிச்சைகளுக்கு வவுனியாவுக்கு பெருமளவிலான நோயாளர்களை அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. ஓமந்தை ஊடான போக்குவரத்து, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வருகின்ற வவுனியா அனுப்பவேண்டிய அனைத்து நோயாளர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை நோயாளர்களை பெருமளவில் பாதித்துள்ளது. எம்மிடம் இருக்கின்ற நோயாளர் காவு வாகனங்கள் அனைத்தும் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா மருத்துவமனைக்குச் சென்றால் அங்கிருந்து முல்லைத்தீவுக்குத் திரும்புவதற்கு முன்னர் ஓமந்தை சோதனை நிலையம் மூடப்பட்டு விடுகிறது. இதனால் நோயாளர் காவு வாகனங்கள் மீண்டும் வவுனியாவுக்குத் திரும்பிச் செல்கிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் அனுமதிக்கப்பட்ட நாளில் முல்லைத்தீவிற்கு வருகை தருகின்றன. மருத்துவமனையின் நடைமுறைகளிற்கு இந்த நடைமுறை மிகவும் கடினமானது. பெரும் நெருக்கடி மிக்கது. குறிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்வதால் பெருமளவிலான நோயாளர்களை நோயாளர் காவு வாகனங்களில் ஏற்றி அனுப்புகிறோம். அதிகளவு நெரிசல் நோயாளர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்துகிறது. எரிபொருள் மற்றும் போக்குவரத்து நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பன மனிதாபிமான சிந்தனையின் அடிப்படையில் நிச்சயம் நீக்கப்பட வேண்டும். இத்தகைய நெருக்கடிகள் பொது மருத்துவமனைக்கு மட்டுமானது அல்ல. மாவட்டத்தின் அனைத்து பிரதேச, கிராமிய மருத்துவமனைகளிலும் மேற்குறித்த நெருக்கடிகள் உள்ளன என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.