[திங்கட்கிழமை, 21 மே 2007]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அடாத பழி போட இந்திய றோ உளவுத்துறையும் இந்து நாளிதழும் கூட்டுச்சதி செய்வதாக "தென்செய்தி" இதழ் சாடியிருக்கிறது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென்செய்தி" இதழில் எழுதப்பட்டுள்ளதாவது:
வான்புலிகளிடமும், கடற்புலிகளிடமும் தொடர்ந்து தோல்விகளைப் பெற்று நடுங்கிக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கும் அரசுக்கும் முட்டுக்கொடுத்து நிறுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள அதிபர் இராசபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினை இந்தியாவுடன் செய்துகொள்ள முயற்சிசெய்து பார்த்தனர். ஆனாலும் அந்த யோசனையை ஏற்பதற்கு இந்திய அரசு மறுத்துவிட்டது.
எனவே சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற யோசனையை சிங்கள அரசு முன்வைத்தது. இந்த யோசனையை உள்நோக்கம் குறித்து கொஞ்சமும் ஆராயாமல் இதற்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் ஆதரவு தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பின்வாங்கினார். ஆனாலும் கூட்டு ரோந்துத் திட்டத்தை சிங்கள அரசும் கைவிடவில்லை. இந்திய ரா உளவுத்துறையும் கைவிடவில்லை.
குமரி மாவட்டத்தில் ஐந்து மீனவர்களைச் சிங்களக் கடற்படைச் சுட்டுக்கொன்ற செய்தி அம்மாவட்ட மக்களைக் கொதித்தெழ வைத்தது.
சிங்கள அரசுக்கு எதிரானப் போராட்டங்கள் வெடித்தன. மக்களின் இந்தக் கொதிப்புணர்வை திசைத்திருப்ப இந்தியக் கடற்படைத்தளபதி..... விடுதலைப் புலிகள்தான் தமிழ் மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாக அறிவித்தார்.
சிங்களக் கடற்படைத் தளபதி தன்னிடம் இவ்வாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதையொட்டி இந்தியக் கடல் பகுதியில் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்றது இவர்களாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியானது. சிங்கள மீனவர்கள் கியூ பிரிவு போலிஸ் விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
6 சிங்கள மீனவர்களின் பெயர்களும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
ஆனால் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலைப் புலிகள் என, அறிவித்ததோடு குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்றது இவர்களே என்றும், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று காவலில் வைத்திருப்பதாகவும் அறிவித்தார்.
மறுநாள் சட்டமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக எழுந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அவருக்குப் பதில் கூறும் வகையில் பேசிய முதலமைச்சர் காவல்துறைத் தலைவர் கூறிய செய்தியை உறுதிசெய்தார்.
இதையொட்டி மே 1 ஆம் தேதி வெளியான இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தலையங்கத்தைத் தீட்டியது.
இந்து இதழின் தலையங்கத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு
1. 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தப்பட்டது குறித்து, இந்திய அரசோ, தமிழக அரசோ கண்டனம் தெரிவிக்கவில்லை.
2. இலங்கை எண்ணெய் நிறுவனத்துடன் இந்திய எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து அமைத்த எண்ணெய் குதங்கள் மீது வான்புலிகள் குண்டுவீசித் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
3. இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை டில்லியில் வகுக்கப்படவேண்டும், சென்னையில் வகுக்கப்படக்கூடாது.
4. வான்புலிகளின் தோற்றம் இந்தியாவிற்குப் பேரபாயம் ஆகும்.
5. தமிழ்நாட்டில் உள்ள நவீன ராடார்கள் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆகியவற்றை இந்தியா உடனடியாக சிங்கள இராணுவத்திற்கு வழங்கவேண்டும். அப்போதுதான் வான்புலிகளை ஒழிக்க முடியும்.
6. இந்தியாவின் தேசிய நலனை மனதில் கொண்டு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் புலிகளின் அபாயத்தை முறியடிக்க வேண்டும்.
7. தமிழ்நாட்டில் தங்கு தடையில்லாமல் இயங்கி வருகிற புலிகளின் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கவேண்டும்.
தமிழகக் காவல்துறைத் தலைவர் வெளியிட்ட அறிக்கை அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் எழுப்பிய கேள்வி, அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதிலுரை, இவற்றைத் தொடர்ந்து இந்து இதழ் தீட்டிய தலையங்கம் ஆகிய அனைத்தும் வௌ; வேறானவை அல்ல. ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புகொண்டவை. அனைத்துமே ஒரே குரலில் விடுதலைப் புலிகள் மீது அடாத பழியைச் சுமத்தி அவர்களை ஒழிக்க இந்திய அரசைத் தூண்டுவதற்காகவே ஆகும்.
இந்தியக் கடற்படையும் சிங்களக் கடற்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடத்தும் திட்டத்திற்கு புத்துயிர் கொடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களுடன் தங்களுக்கு இருந்துவருகிற தொப்புள் கொடி உறவைச் சீர்குலைக்கிற எந்த முயற்சிகளிலும் தாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை என்பதையும் வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கள்மீது பொய்யானப் பழியை சுமத்துவதற்கான முயற்சி நடைபெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தரும் வேலையில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தும் செய்தியைப் பெரிதாக வெளியிட்டு தலையங்கமும் தீட்டிய இந்து நாளிதழ், விடுதலைப் புலிகள் வெளியிட்ட மறுப்பை முழுமையாக இருட்டடிப்புச் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்து நாளிதழின் பத்திரிகை தர்மம் என்பது இதுதான். செஞ்சோலையில் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள் சிங்கள விமானக் குண்டுவீச்சிற்கு பலியான போதும் செம்மணியில் 400க்கும் மேற்பட்டத் தமிழர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக புதைக் கப்பட்ட நிகழ்ச்சியையும் கண்டிக்க இந்து நாளிதழ் முன்வரவில்லை.
தொடர்ந்து சிங்கள இராணுவ விமானத் தாக்குதலின் விளைவாக அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவது கண்டு இந்து நாளிதழ் பதறவில்லை. ஆனால் புலிகளின் விமானம் சிங்கள இராணுவ இலக்குகளை குறிவைத்துத் தாக்குகிறது என்றவுடன் இந்து நாளிதழ் பதறித் துடிக்கிறது.
இந்து ஆசிரியர் என். இராம் அவர்களுக்கு இலங்கை அதிபராக இருந்த சந்திரிகா இலங்கா இரத்னா விருது அளித்துப் பாராட்டியதற்கு இந்து நாளிதழ் நன்றிக்கடன் செலுத்துகிறது.
புலிகள் சிங்கள இராணுவத்துடன் போராடுகிறார்களே தவிர ஒருபோதும் அப்பாவிச் சிங்கள மக்களை தாக்கியது இல்லை. ஆனால் சிங்கள இராணுவம் புலிகளுடன் மோதத் திராணியில்லாமல் அப்பாவி தமிழ் மக்களை தினமும் கொன்று குவிக்கிறது. அதைக்கண்டிக்க முன்வராத இந்து நாளிதழும், ஞானசேகரன்களும், காவல்துறைத் தலைவர்களும், முதலமைச்சரும் புலிகள் மீது அடாது பழிச் சுமத்துதலில் மட்டும் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுகின்றனர்.
நன்றி:புதினம்
Monday, May 21, 2007
"புலிகள் மீது அடாத பழி" போடும் "றோ" உளவுத்துறை - "இந்து" நாளிதழின் கூட்டுச்சதி: தென்செய்தி.
Monday, May 21, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.