Wednesday, May 16, 2007

கண்டிக்கப்படவேண்டிய சிங்கள அராஜகம் - டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்.

[புதன்கிழமை, 16 மே 2007]

கல்வியால் மேம்பட்ட சமுதாயமாக அன்றும் இன்றும் விளங்கும் எம்மினம் 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் கல்வியில் உச்சநிலையை அடைந்திருந்தது. இதற்கு காரணம் தலைசிறந்த கல்விநிலையங்களும் புகழ்பெற்ற கல்விமான்களும் அவர்களால் மாணவருலகம் பெற்ற பெறுபேறுகளுமே. இதனை நன்கறிந்தே சிங்கள அரசு தரப்படுத்தலை அறிமுகம் செய்து தமிழ் மாணவர்களின் உயர்கல்வியை மட்டுப்படுத்தியது.

அத்துடன் நின்றுவிடாது அன்று தொடக்கம் இன்றுவரை எம்மினத்தின் கல்வியை அழிப்பதில் மாறிமாறி பதவிக்கு வரும் சிங்கள பேரினவாதிகள் தொடர்ந்தம் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்மினத்தின் அடிநாதமான அறிவுத்தளத்தை அழிக்க முற்பட்ட அரசு உள்நாட்டு போரென்ற போர்வையில் விமானக்குண்டு வீச்சுமூலம் வித்தியாலங்கள் பலவற்றைச் சிதிலமாக்கியது. ஊதாரணமாக நாகர்கோயில் பாடசாலையில் விழுந்த குண்டு 150 மாணவர்களை காவுகொண்டது. அண்மையில் செஞ்சோலையில் போடப்பட்ட குண்டு 42 மாணவிகளை பலிகொண்டது. இவ்வாறு இற்றைவரை பல மாணவர்கள், ஆசிரியர்கள,; பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொன்றொழிக்கப் பட்டுள்ளார்கள்.

அறிவுப்பயிர் வளர்க்கும் கல்வித்துறையினை அழித்தொழிக்கும் முனைப்பு அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளது. புதிய சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் காணாமற்போன, கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட மாணவர்கள,; ஆசிரியர்கள,; பேராசிரியர்கள் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் சிங்கள தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டு பல மாதங்களாகியும் சிங்கள அரசு இதுவரை அவரை கண்டுபிடிக்கவில்லை. இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் கல்லூரி ஆசிரியர்கள,; மாணவர்களை கைதுசெய்தும் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர்கள,; மாணவர்களென 270 பேர்வரை பெயர்குறிப்பிட்டு கொலைப்பயமுறுத்தல் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் மூலம் வெளிவந்துள்ளது.

அண்மையில் மனித உரிமைகளை காப்பாற்ற சிறிலங்கா அரசு ஆவண செய்யவேண்டுமென்று அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகள் விடுத்த வேண்டுகோள்களை உதாசீனம் செய்யும் செயலாகவும், எந்தப்பேரரசு சொன்னாலும் தமிழர்களையும், அவர்களது கல்வியையும் அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள தேசம் பின்னிக்கப்போவதில்லையென்ற கருத்துப்படக்கூடிய வகையில் சிங்களதேசத்தின் அச்சுறுத்தல் அமைந்துள்ளது.

சிங்களதேசத்தின் இச்செயற்பாட்டினை டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிப்பத்துடன் ஜனநாயகத்தின் பெயரில் உலகில் போர்கொடி தூக்கியுள்ள சக்திகள் தமிழீழ மக்களிற்கெதிராக சிங்களதேசத்தால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளையும் கொலைப்பயமுறுத்தல்களையும் கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
பொன். மகேஸ்வரன்
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.