Monday, May 28, 2007

மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை.

[திங்கட்கிழமை, 28 மே 2007]


சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்துவந்த கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பணிபுரிந்த இவர், விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருக்கு தனது நிலை பற்றி இந்த அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

அரச ஊடகங்கள் தன்னை விடுதலைப் புலிகளின் உளவாளியாக சித்தரித்து தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும், இதனால் படையில் இருந்தவாறு மேற்கொண்ட தனது பட்டப் படிப்பை தொடர முடியாமல் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற இவ்வாறான நடவடிக்கை காரணமாக தனது மனைவி, மற்றும் பிள்ளைகள் வீதியால் செல்ல முடியாது துரோகிகளாக் சித்தரிக்கப்பட்டு, வார்த்தைப் பிரயோகங்களால் துன்புறுத்தப்படுவதாகவும் படை அதிகாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவாளியாக தன்னை சித்தரித்திருப்பதால், வெளிநாடு செல்வதற்கு வீசா பெற முடியவில்லை எனவும், தனக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே மேலும் கூறினார்.

தனது குடும்பம் மட்டுமன்றி, தனது நிலையை அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய ஊடகங்களுக்கு கூறுவதற்கு மனைவிக்கு உதவி புரிந்த மேலும் இருவரும் சிறீலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக, றோஹண கமகே கூறினார்.

சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த இந்த கடற்படை புலனாய்வு அதிகாரி, திடீரென விடுதலைப் புலிகளின் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டு, அவரது நடவடிக்கைகள் அரசினால் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.