[ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007] சிறிலங்கா இராணுவம் ஓமந்தையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையை முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'நேசன்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதியில் உள்ள 450 வருடங்கள் பழமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களை கவரும் பகுதியாகும். அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியான 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பெருமளவான பக்தர்கள் தெற்கில் இருந்து அங்கு சென்று வந்துள்ளனர். அண்ணளவாக ஒவ்வொரு வருடமும் 500,000 பேர் சென்று வருவதுண்டு. மோதல்கள் காரணமாக கடந்த ஆண்டு தெற்கில் இருந்து பக்தர்கள் எவரும் அங்கு செல்லவில்லை. கடந்த மாதம் இத்தாலிக்கு சென்ற மகிந்த வத்திக்கான் செயலாளரிடம் மடுவுக்கு மக்கள் இலகுவாக சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் சில மாதங்களுக்கு முன்னரே மடுப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மடுவிலும் அதன் சுற்றாடலிலும் இருந்த மக்கள் வடக்கே பெரியமடுவை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். எனவே மடுவையும் அதனை அண்டிய பகுதிகளையும் மீட்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது என்பதே இதன் பொருள். மதவாச்சி மன்னார் நெடுஞ்சாலையான ஏ-14 வீதியின் தென்புறம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அதன் வடபுறம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த சாலையின் தலைமன்னார் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையிலான முக்கியமான இடங்களில் இராணுவம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 57 ஆவது படையணியின் 1ஆவது, 2 ஆவது, 3 ஆவது பிரிகேட்டுகளை நிறுத்தியுள்ளது. பல ரெஜிமென்ட் களில் உள்ள படையினரில் இருந்து தரமான படையினரை தெரிந்தெடுத்து இந்த புதிய 57 ஆவது படையணி பிரிகேடியர் சுமித் மானவடு தலைமையில் அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படையணியே மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் புதிய தளபதியான கேணல் நிர்மல் தர்மரட்ன தலைமையிலான சிறப்பு படையினரின் 1 ஆவது, 2 ஆவது றெஜிமென்டுகளும், கஜபா றெஜிமென்டின் 8 ஆவது பற்றலியனும், சிங்க றெஜிமென்டின் 4 ஆவது பற்றலியனும், விஜபா றெஜிமென்டின் 9 ஆவது பற்றலியனும், 21 ஆவது தேசிய காவல் படையினரும் இந்த நடவடிக்கைகளில் பங்குபற்றி வருகின்றனர். தொப்பிக்கல காட்டுப் பகுதியில் சிறப்பு கொமொண்டோப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதேசமயம் சிறப்புப் படையினர் மன்னார் காட்டுப்பகுதியிலும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்னிப் பகுதியில் இந்த வாரம் நடைபெற்ற கடும் மோதல்களில் 4 அதிகாரிகளும், 30 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அதிகாரிகளில் சிறப்பு படை அதிகாரியான கப்டன் நிருசாவும் அடங்குவார். இதில் காயமடைந்த படையினரில் 18-க்கும் மேற்பட்ட படையினர் அனுராதபுரம் மற்றும் கொழும்பு மருத்துவமனைகளுக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த மோதல்களில் இறந்த படையினரின் எண்ணிக்கை இராணுவத்தரப்பு கூறுவதை விட அதிகம் என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கனகராயன் குளத்தில் உள்ள தமது பீரங்கிகளை புளியங்குளத்திற்கு நகர்த்திய விடுதலைப் புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நகர்த்தக்கூடிய இந்த பீரங்கிகள் நெடுங்கேணியில் இருந்து மூன்றுமுறிப்பு பகுதிக்கு நகர்த்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் பழைய நிலைகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இராணுவத்தின் இருமுனை நகர்வுத் திட்டமாக விடுதலைப் புலிகளின் முன்னனி நிலைகளை ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன், புளியங்குளம், மாங்குளம் போன்ற பகுதிகளையும் கைப்பற்றுவதே உள்ளது. எனினும் இது கிழக்கில் இடம்பெற்ற நடவடிக்கைகளைப் போல இலகுவானதல்ல. இன்றுவரை மன்னாரில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் 1,700 - 2,000 குடும்பங்கள் மடு, பெரியபண்டிவிரிச்சான், சின்னபண்டிவிரிச்சான் பகுதிகளில் இருந்து வெளியெறி உள்ளனர். அவர்கள் தற்போது மடுவில் இருந்து வடக்கு நோக்கி 10 கி.மீ தொலைவில் உள்ள பெரியமடு பகுதியில் தங்கியுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.