இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சமூட்டும் மனித அவலங்கள், மனித உரிமைகளை மதிப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தனது கவலையை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிக அக்கறைகள் எடுப்பதுடன், மனிதாபிமானப் பணிகளுக்கான வசதிகளையும், உதவி நிறுவனப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இலங்கைக்கான தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் ரொனி பன்புறி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறைகள் காரணமாக மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். குறிப்பாக பொதுமக்கள் தொடர்பாகவே நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். அவர்களில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அடிப்படை மனிதாபிமான விதிகளை மதிக்கும் படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் ஏனைய உதவிப் பொருட்களும் சென்றடைய அனுமதிக்குமாறும், இதில் முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு சென்றடைய உதவுமாறும் சம்மந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக்கொள்கின்றேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவை நியாயப்படுத்த முடியாதவை மட்டுமல்ல உண்மை அற்றவையும் கூட. இங்கே உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களின் சேவை தூய்மையான மனிதாபிமானப் பணிகளை மட்டுமே கொண்டவை.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அடுத்து வரும் 6 மாதங்களுக்கு எமக்கு 18,677 தொன் உணவுப் பொருட்கள் தேவை. இது 10.7 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. எமக்கான உதவிகள் அற்ற நிலையில் மக்களின் மனிதாபிமான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முடியாது.
முகாம்களில் உள்ள மக்களுக்கும், தமது இருப்பிடங்களுக்கு திரும்பிய மக்களுக்கும் நாம் உதவி வருகின்றோம். எனினும் அரசாங்கம், பலவந்தமாக மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருகின்றோம் என்றார் அவர்.
இலங்கைக்கான தனது பயணத்தின் போது ரொனி பன்புறி அமைச்சர்கள், கொடையாளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை கொழும்பில் சந்தித்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உலக உணவு திட்டத்தின் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
மேலும் வெளிவிவகார செயலாளர், மனித உரிமை அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பின் போது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான வழிமுறைகள், உதவி நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் தாமதமான விநியோகம், குறிப்பாக யாழ். குடாநாட்டுக்கான தாமதமான விநியோகம் போன்றன தொடர்பாக விவாதித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.