Friday, May 25, 2007

புலிகளின் வான் தாக்குதல் விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி.!

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]

* சபை அலுவல்கள் இருதடவை இடைநிறுத்தம்

- டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்களை முறியடிக்க போதுமான பலத்துடனும், தயார் நிலையிலும் இலங்கை விமானப்படையினர் இல்லையெனவும் எனினும், இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் பரஸ்பரம் முரண்பாடான அறிக்கைகளை விடுத்து வருவதாகவும் கூறி, இவ்விவகாரம் தொடர்பாக விவாதமொன்றுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கையை அடுத்து சபையில் நேற்று வியாழக்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் சபை அலுவல்களும் இருதடவை இடைநிறுத்தப்பட்டன.

பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் குழுக்களின் பிரதித் தலைவரான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினரான ரேணுகா ஹேரத், நேற்று முன்தினம் புதன்கிழமை சபையில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பாக விளக்கமளித்து கூற்றொன்றை விடுத்தார்.

இதன் பின்னர் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., "விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்களை முறியடிக்க போதிய பலத்துடனும் தயார் நிலையிலும் விமானப் படையினர் இல்லை. எனினும், இது தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும், பாதுகாப்பு செயலாளரினாலும் பரஸ்பரம் முரண்பட்ட அறிக்கைகள் விடுக்கப்படுகின்றன. எனவே, இதன் அவசர நிலையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து விவாதமொன்றுக்கு நேரம் ஒதுக்கி தரவேண்டும்" என்றார்.

எனினும், கிரியெல்ல எம்.பி.யின் கோரிக்கையை மறுத்த ஆளுநர் தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விவாதத்திற்கான நேரம் ஒதுக்கித் தர கோருவதற்கான நேரம் கடந்து விட்டதாகவும், இதற்கான கோரிக்கையை ரேணுகா ஹேரத் எம்.பி.யின் தனிப்பட்ட விளக்கக் கூற்றுக்கு முன்னதாக முன்வைத்திருக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டினார்.

எனினும், தங்களது சிறப்புரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தங்களது தரப்பில் இந்த கோரிக்கைக்கு 20 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் விவாதத்துக்கான நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டுமென சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சபையிலிருந்த அனைத்து ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் ஆசனத்தை விட்டு எழுந்து நின்று விவாதத்துக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரினர்.

எனினும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் ஐ.தே.க.வினருக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து, இவ்விவகாரம் குறித்து சபாநாயகரின் ஆலோசனையைக் கேட்டு தீர்மானம் சொல்லவேன குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரசேகரன் காலை 10 மணியளவில் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தி வைத்தார்.

இதன் பின்னர் காலை 10.10 மணியளவில் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது விவாதத்துக்கான கோரிக்கையை முன்வைத்த ஐ.தே.க.வின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., இது குறித்து ஏற்கனவே சபாநாயகருக்கு அறியத் தந்திருப்பதாகவும், அத்துடன், இதற்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 2 மணித்தியாலங்களுக்கு விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அடுத்ததாக அனுதாப பிரேரணை நடைபெறுமென குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்த போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, ஏற்கனவே இன்று (நேற்று) ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதைவிடுத்து இன்னுமொரு விவாதம் ஏற்றுக் கொள்ளப்படுவது சரியாவென விளக்கம் கோரினார்.

அத்துடன், 20 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக ஏற்கனவே விவாதமொன்றுக்கு நேரம் குறிக்கப்பட்டிருக்கையில் வேறொரு விவாதத்திற்கு இடமளிக்கப்படுமாயின் இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும் தங்களுக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இடமளிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளே வாதிட்டார்.

இதையடுத்து, அரச தரப்பு உறுப்பினர்கள் தங்களது ஆசனங்களிலிருந்து எழுந்து கூச்சலிட்டதுடன், ஐ.தே.க. தரப்பிலிருந்தும் அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.

கூச்சல், குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் முகமாக கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதி குழுக்களின் தலைவர் சந்திரசேகரன், காலை 10.20 மணியளவில் மீண்டும் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தி வைத்தார்.

மீண்டும் சபை நடவடிக்கைகள் 10.30 மணியளவில் ஆரம்பமான போது பேசிய இராமலிங்கம் சந்திரசேகரன் ஏற்கனவே விவாதமொன்றுக்கு நேரம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 20 உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் சபாநாயகரின் அனுமதியுடன் அவசர நிலையின் கீழ் முக்கியத்துவம் கருதி இன்னுமொரு விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும். இதற்கமைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் ஐ.தே.க. கோரிய விவாதம் நடைபெறும்" என்றார்.

இதேநேரம், 20 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஏற்கனவே நேரம் குறிக்கப்பட்ட விவாதமொன்றை அன்றைய தினத்தில் ரத்து செய்து புதிய விடயமொன்றை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியுமானவென குழுக்களின் பிரதித் தலைவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே அதற்கமையவே தங்களும் இனி செய்யப்படுவோமெனவும் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.