[வியாழக்கிழமை, 31 மே 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைத்த புறக்கோட்டைப் பகுதி காவல்துறையினரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தனர். புறக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள சுமார் 60 தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் கடுமையாகத் தனது உத்தரவைப் பிறப்பித்த காவல்துறை அதிகாரி, நாளை காலைக்குள் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படா விட்டால், விடுதிகளிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுவார்கள் எனக்கடுமையாக தொனியில் எச்சரித்ததாக விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். அதாவது 12 மணி நேரத்துக்குள் இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். புறக்கோட்டைப் பகுதி உரிமையாளர்களே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பிலுள்ள அனைத்து தங்கு விடுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என காவல்துறையினர் தெரிவி்த்தாகவும் அறியவருகின்றது. புறக்கோட்டைப் பகுதியிலேயே அதிகமான விடுதிகள் இருக்கின்ற போதிலும், கொழும்பு நகரில் சுமார் 150 வரையிலான தங்குவிடுதிகள் இருப்பதாகவும், இவற்றில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது. வெளிநாடு செல்வதற்காகவும், மருத்துவ, கல்வி மற்றும் நேர்முகப் பரீட்சை போன்ற அலுவலக அல்லது சொந்த வேலையாக வருபவர்களுமே இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கின்றார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வருபவர்களில் பலர் விடுதிகளில் மாதக்கணக்கில் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட, சிலர் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருந்தே கொழும்பில் தொழில் புரிகின்றார்கள். உடனடியாக இரவோடிரவாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து இவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தருப்பதாகத் தெரிகின்றது. பலர் என்ன செய்வதெனத் தெரியாது திண்டாடிக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. முக்கிய வேலைகள் நிமித்தமும், மருத்துவத் தேவைகளுக்காகவும் வந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாது அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இது மேலிடத்து உத்தரவு எனவும், இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கப்போவதில்லை எனவும் காவல்துறையினர் கடுமையாகத் தெரிவித்து விட்டார்களாம். இதேவேளையில், கொழும்பிலுள்ள கடைகளில் தொழில்புரியும் தமிழர்களையும் வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே பெருமளவுக்கு இவ்வாறு கடைகளில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி:புதினம்
Thursday, May 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)






அங்கு சிரமப்படும் மக்களை நினைத்து வேதனையாக இருக்கின்றபோதும்.
ReplyDeleteமகிந்தவின் இந்த நடவடிக்கை பெரிய தவறு என்பதை அவர் புரிந்துகொள்வார்.?
பெற்றா பகுதியில் தங்குவிடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்ற உத்தரவு.
ReplyDeleteகொழும்பு பெற்றா காவல்நிலைய பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான 68 தனியார் தங்குவிடுதிகளில் இருந்து குறைந்தது 5000 தமிழ் மக்களை 24 மணி நேரத்திற்குள் அவரவர் சொந்த இடங்களுக்கு செல்லுமாறு கொழும்பு பிரதம காவல்துறை பரிசோதகரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அறியமுடிகிறது. அக்குறிப்பிட்ட சிறீலங்கா காவல்துறை அதிகாரியின் எச்சரிக்கையின்படி நீங்கள் வடக்கில் இருந்து வந்தால் வவுனியாவிற்கு செல்லுமாறும் மலையகப் பகுதியில் இருந்து சென்றிருந்தால் அங்கேயே மறுபடியும் செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமது அறிவுறுத்தல்களின்படி கடைப்பிடிக்கத் தவறின் காணமல் போதல் போன்ற முறைப்பாடுகளையும் பதிவு செய்யமுடியாமல் போகும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
-Pathivu-
கொழும்பில் உள்ள தமிழரை வெளியேற சொல்ல இன்னும் எவ்வளவு நாள் எடுக்கும்???.
ReplyDelete