Sunday, February 04, 2007

விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த.!!!

[ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007]

போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக காட்டும் செயல் என சர்வதேச செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய அரச அதிபர் தெரிவித்ததாவது:

விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றப்போவதில்லை, நாடு பிரிவடைவதையும் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை அதற்காக எல்லா மக்களும் (சிங்கள மக்கள்) ஒன்றிணைய வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அரசின் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று அரச படையினரால் கைப்பற்றப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடும் பாதுகாப்புடன் விஜயம் செய்த மகிந்த தான் விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப் போவதாக தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.