
(அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய "The tragic fate of TRO employees abducted by Karuna cadres" எனும் கட்டுரையில் இருந்து முக்கிய பகுதிகள் இவைகள்)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 பணியாளர்கள் வெலிகந்தையில் வைத்துக் கடத்தப்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதற்கு வெலிகந்தை ஊடாக பயணம் செய்த 5 புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டார்கள். அதில் மூவர் உடனடியாகவே விடுதலை செய்யப்பட்டார்கள்.
அடுத்த நாள் மீண்டும் வெலிகந்தையில் வைத்து புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் 15 பேர் கடத்தப்பட்டார்கள். அதில் ஆரம்பகட்ட பணியாளர்களாக இருந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு முதல்நாள் இருவரும் அடுத்த நாள் ஐவருமாக மொத்தம் 7 பணியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள்.
இந்தக கடத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இவர்களை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்தக் கடத்தலைக் கண்டித்துக் குரல் கொடுத்தன. அமெரிக்க அரசின் வெளிவிவகாரத்துறையின் துணை அதிகாரியான கிறிஸ்ரீனா றொக்காவும் 7 பணியாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து மார்ச் மாதம் ஒரு விசேட அறிக்கை வெளியிட்டதோடு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது.
அத்துடன் சர்வதேச நடுகளிடமும் நிறுவனங்களிடம் சிறிலங்காவின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் மாஅதிபர் போன்றோருக்கு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அமெரிக்கா தொடங்கி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வரை வேண்டுகோள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை.
மனித உரிமை மீறல் சம்பந்தமான 15 விடயங்களை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரித்தது. இந்த விசாரணையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தல் சம்பவம் இடம்பெறவில்லை. புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் கடத்தல் சம்பவத்தையும் இந்த ஆணைக்குழுவின் விசாரணையில் இணைக்கும்படி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்த வேண்டுகோளும் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த கடத்தில் சம்பவத்திற்கு கருணா குழுவே பொறுப்பு என்று பல தரப்பினரால் சந்தேகிக்கப்பட்டது. அத்துடன் கடத்தலின் போது விடுதலையான இருவர் தம்மை விசாரணை செய்த இடத்தில் கருணா குழுவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.
அது மட்டும் அன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுதலைப்புலிகளே கடத்தினார்கள் என்று புதிய ஒரு கதையும் பரப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு அமைதியாக இருக்கும்படியும், இந்தக் கடத்தல் ஒரு நாடகம் என்றும், கடத்தப்பட்டவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றும் செய்தி அனுப்பி உள்ளதாகவும் கதைகள் பரப்பப்பட்டன. ஆனால் கடத்தப்பட்டவர்கள் திரும்பவில்லை.
பலரால் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டு விட்டது. ஆனால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்கள் இச் சம்பவத்தை மறக்கவில்லை. கடந்த வாரம் கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கடத்தப்பட்டவர்களின் இரு உறவினர்கள் பேசினார்கள். கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும், அவர்கள் வீடு திரும்புவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து பேசினார்கள்.
எத்தனை பேர்தான் இவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாலும் கூட, உண்மை என்பது அதுவாக இல்லை. ஒரு எழுத்தாளர் மூலம் கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்களின்படி கடத்தப்பட்ட 7 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர்களில் பெண் பணியாளர் கொடுரமான வல்லுறவிற்கு பின்பு கொல்லப்பட்டிருக்கிறார். இதை செய்தவர்கள் கருணா குழுவினர்.
தகவலை தந்தவர் கருணா குழுவினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவர். கருணா குழுவிற்குள் இருக்கின்ற அதிருப்தியாளர்கள் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது. இந்த அதிருப்தியாளர்கள் கருணா குழு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் வேட்டை நாய்களாக செயற்படுவதாக கருதுகிறார்கள். கருணா குழுவின் நடத்தைகளை அருவருப்புடன் நோக்குகிறார்கள்.
கடத்தப்பட்டவர்களுக்கு நடந்த கொடிய சம்பவம் மனதை பதற வைக்கக்கூடியது. தகவல் கிடைத்த பின்பும் பல வாரங்கள் இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே இந்த துயர நிகழ்வு இங்கு பதியப்படுகிறது.
கருணா குழுவின் முக்கிய தலைவனாக பிள்ளையான் என்பவன் இருக்கின்றான். இந்தப் பிள்ளையானே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கும் காரணமானவன். கருணா குழுவின் பல ரகசிய நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருப்பவன். கொழும்பில் நடக்கும் வர்த்தகர்கள் கடத்தலுக்கும் பிள்ளையானே முக்கிய மூளையாக செயற்பட்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.
பொலநறுவையில் உள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் பல முகாம்கள் உண்டு. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட ஜனவரி 29 அன்று பிள்ளையானால் கருணா குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாகனம் ஒன்றில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை வெலிகந்தைப் பகுதியில் வைத்து கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான்.
அதன்படி சிந்துயன் என்பவனின் தலைமையில் கருணா குழுவின் அணி ஒன்று ஒரு வெள்ளை வானில் புறப்பட்டது. இந்த சிந்துயன் பிரதீபன் என்றும் அழைக்கப்படுகிறான். தீவுச்சேனையில் இருந்து புறப்பட்ட ஆயுதம் தாங்கிய இந்த அணி வெலிகந்தையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டு நின்றது. இந்த கடத்தல் அணியில் இருந்த மற்றையோர் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆவார்கள். அனைவரும் 20ஐ நெருங்கிய வயதுடையவர்கள்.
புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் இராணுவ சோதனைச் சாவடியைத் தாண்டி வெலிகந்தையை அடைந்தது. கருணா குழுவின் வாகனம் அவர்களை பின்தொடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் கருணா குழுவிற்கு சாதகமான ஒரு இடத்தில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பின்பு பணியாளர்களோடு வாகனமும் தீவைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகணத்தின் முன்பள்ளி அபிவிருத்தி செயலாளராகிய காசிநாதர் கணேசலிங்கமும், மண்முனை வடக்கின் முன்பள்ளி அபிவிருத்தி இணைப்பாளராகிய செல்வி டோசினியும், முன்பள்ளி ஆசிரியைகளான புண்ணியமூர்த்தி நடேஸ்வரி, சித்திரவேல் சிவமதியும், மற்றும் வாகன ஓட்டுனர் கதிர்காமர் தங்கராசாவும் கடத்தப்பட்ட ஐவரும் ஆவார்கள்.
கடத்தப்பட்டவர்கள் தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டார்கள். ஆண்களிடம் சிந்துயனே நேரடியாக விசாரணை நடத்தினான். பெண்களிடம் கருணா குழுவின் புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பான சித்தா என்று அழைக்கப்படும் பிரதீப் என்பவன் வேறு இருவருடன் இணைந்து விசாரணை நடத்தினான்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மீதான படுகொலையை சித்தாவே நடத்தியிருந்தான். 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சித்தாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடையாளம் கண்டு கொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடமும் சித்தா குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் தற்பொழுது அச்சத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.
மூன்று பெண்களும் சித்தாவாலும் சச்சி என்று அழைக்கப்படும் சாந்தனாலும், ஜீவா என்று அழைக்கப்படும் திலகனாலும் விசாரிக்கப்பட்டார்கள். ஒரு நேரத்தில் சித்தா டோசினியை மற்ற பெண்களிடம் இருந்து பிரித்து தனியாக விசாரிப்பதற்கு அழைத்துச் சென்றான். சச்சியும் ஜீவாவும் மற்ற இரு பெண்களையும் தொடர்ந்து விசாரித்தனர்.
சிந்துயன் தொடர்ந்து இரு ஆண்களையும் விசாரணை செய்து கொண்டிருந்தான். கணேசலிங்கம் யாழ்பாணத்தில் உள்ள தெல்லிப்பழையை சேர்ந்தவர். தங்கராசா கிளிநொச்சியை சேர்ந்தவர். கடத்தப்பட்ட இரண்டு ஆண்களுக்கும் வடக்கை சேர்ந்தவர்களாக இருக்க, மூன்று பெண்களும் கிழக்கை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரண்டு ஆண்களும் சிந்துயனால் பொட்டுஅம்மானின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர்கள் வடக்கை சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் தூசிக்கப்பட்டார்கள். பின்பு இருவரும் சிந்துயனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதே வேளை நடேஸ்வரியும் சிவமதியும் விசாரணை முடிந்து சிந்துயனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சச்சியும் ஜீவாவும் சிந்துயனிடம் தெரிவித்தார்கள். சச்சியும் ஜீவாவும் விசாரணையின் போது இந்த இரு பெண்களிடமும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்கள். அடுத்த நாள் இரு பெண்களும் சிந்துயனால் விடுவிக்கப்பட்டார்கள்.
டோசினி விடயம் சற்று மாறுபாடாக இருந்தது. டோசினியின் நெருங்கிய உறவினன் ஒருவன் கருணா குழுவின் முக்கிய உறுப்பினாக உள்ளான். இது டோசினிக்கு சாதகமான விடயமாக இருந்தது. அத்துடன் சித்தவிற்கு டோசினி மீது ஒரு பிடிப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் டோசினியை தனிமையில் வைத்து விசாரித்தான். அவளை மிரட்டி அழச் செய்து ஆறுதல் படுத்தினான். பின்பு டோசினியை சித்தாவே தன்னுடைய வாகனத்தில் வீட்டில் கொண்டு போய்விட்டான்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி டோசினி தற்பொழுது சித்தாவுடன் மனைவியாக வாழ்கிறாள். டோசினி மீது எந்த விசாரணையும் வராதபடி சக்தி மிக்க மனிதர்களால் காக்கப்படுகிறாள்.
ஆனால் நடேஸ்வரியும் சிவமதியும் பொலிஸாரினால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டார்கள். பின்பு இருவரும் தாமாகவே கொழும்பிற்கு சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் டோசினி அவ்வாறான வாக்குமூலம் எதையும் வழங்கவில்லை.
அடுத்த நாள் ஜனவரி 30 மதியமளவில் பிள்ளையானிடம் இருந்து சிந்துயனிற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. புனர்வாழ்வுக் கழகத்தின் இன்னும் ஒரு வாகனம் வருவதாகவும் அதையும் கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான். முதலில் வந்த வாகனத்தை கடத்திய அதே அணி மீண்டும் புறப்பட்டது. அதே பாணியில் இரண்டாவது வாகனத்தையும் 4.15 மணியளவில் கருணா குழு வழி மறித்தது.
புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேர் அந்த வாகனத்தில் இருந்தார்கள். வாகன ஓட்டுனர் கருணா குழுவால் தாக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டார். யோகன் அந்த வாகனத்தை பொறுப்பேற்றுக் கொண்டான். மற்றைய கருணா குழுவினர் தமது வெள்ளை வானில் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் வாகனம் நிறுத்தப்பட்டது. புலேந்திரனும் சிரஞ்சீவியும் 15 பணியாளர்களின் கண்களையும் கட்டிவிட்டனர். பின்பு இரு வாகனங்களும் பல குறுக்குப்பாதைகளால் பயணித்து தீவுச்சேனையை அடைந்தன.
15 பேரும் சிந்துயன், சச்சி, ஜீவா ஆகியோரால் விசாரிக்கப்பட்டனர். அதில் 11 பேர் ஆரம்பநிலை உறுப்பினர்கள் என்றும் பயிற்சிக்காக வவுனியா செல்வதும் தெரியவந்தது. மற்றைய நால்வரும் களிநொச்சியில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவகப் பணிமனைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் ஆரம்பநிலை உறுப்பினர்களில் ஒருவர் மீது கருணா குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப்பிரிவின் தலைவரான கீர்த்தியோடு தொடர்புடையவர் என்று கருணா குழு குற்றம் சாட்டியது.
மிகுதி பத்துப் பேரும் மீண்டும் கண்கள் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். வாகனத்தில் குமார், யோகன், ஜெயந்தன் ஆகியோர் இருந்தார்கள். வாகனம் ஏ11 வீதியால் பயணித்தது. அப்பொழுது ஒரு பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. ஜெயந்தன் "முன்னால பொலிஸ் ஜீப்" என்று கத்தினான். "அது பிரச்சனை இல்லை" என்று அமைதியாக யோகன் சொன்னான்.
பின்பு கருணா குழுவினர் பத்துப் பேரையும் விடுவிக்கும் போது மிகுதி 5 பேருக்கும் கடைசிக் காரியங்களை செய்யலாம் என்று அவர்களுடைய குடும்பத்தவர்களுக்கு சொல்லும்படியும் சொன்னார்கள்.
கருணா குழுவால் தடுத்து வைக்கப்பட்ட ஐவரில் கைலாயப்பிள்ளை ரவீந்திரன், சண்முகநாதன் சுயேந்திரன், தம்பிராஜா வசந்தராஜன் ஆகியோர் சிறுவர் இல்லங்களின் கணக்காளர்களாவும், அருணேஸ்வரராஜா சதீஸ்வரன் கணக்காள பயிற்சி பெறுபவராகவும் செல்வி பிறேமினி தனுஸ்கோடி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிழக்கு மாகாண கணக்காளராகவும் பணியாற்றியவர்கள் ஆவார்கள். பிறேமினி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் மாணவியாகவும் இருந்தார்.
சித்தாவினால் ஐவரும் மிகக் கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள். சிந்துயனும் விசாரணையில் பங்கு கொண்டான். ஆண்கள் நால்வரும் கடுமையாக தாக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். அதன் பிறகு சித்தாவும் மற்றவர்களும் அந்த முகாமை விட்டுச் சென்றார்கள். செல்கின்ற போது சிந்துயனிடம் "இனி உங்கட பொறுப்பு" என்று கூறிச் சென்றார்கள்.
பின்பு நான்கு ஆண்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அவர்களின் கண்கள் கட்டப்பட்டது. அவர்களை கண்கள் கட்டிய நிலையிலேயே காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒரு இடத்தில் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அங்கே பெரிய குழி ஒன்றை தோண்டும்படி அவர்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்கள் குழியை தோண்டிய பிற்பாடு, நால்வருயும் வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பிறேமினிக்கு ஏற்பட்ட கதி மிகக் கோடுரமானது. பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மற்றைய கருணா குழு உறுப்பினர்களாலும் வல்லுறவிற்கு உப்படுத்தப்பட்டார். 14 கருணா குழு உறுப்பினர்கள் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர். சில கருணா குழு உறுப்பினர்களுக்கு அங்கு நடந்தது உடன்படில்லாத போதும், அதை தடுப்பதற்கு வலு அற்றவர்களாக இருந்தார்கள்.
அதிகாலையில் பிறேமினி காட்டுக்குள் கருணா குழுவால் அழைத்துச் செல்லப்பட்டார். பிறேமினி ஒரு நடைப்பிணம் போல் அவர்களுடன் சென்றார். பிறேமினி எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்று முன்னாள் கருணா குழு உறுப்பினர் தெரிவிக்கின்றார். காட்டில் வைத்து பிறேமினி வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டது.
Saturday, February 10, 2007
எமது சகோதரிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி மற்றும் கொடூரதான முறையில் தமிழர்களைக் கொல்லும் கருணா.
Saturday, February 10, 2007





