Saturday, February 03, 2007

வாகரைக்கு மகிந்த விஐயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.!!!

[சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2007]

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை காலை மேற்கொண்டிருந்தார்.

மகிந்தவுடன் படைத்தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சா ஆகியோரும் சென்றிருந்தார்கள். மகிந்தாவும் அவரது தளபதிகளும் விமானப்படை உலங்குவாணுர்தி மூலம் வாகரையை அடைவதற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.


தென்னிலங்கையில் நாளை நடைபெற உள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் மகிந்த வாகரைக்கு விஜயம் மேற்கொண்டது தனது இராணுவ வெற்றியை தெற்கில் காண்பிப்பதற்கே என தெரிவிக்கப்படுகின்றது.


வாகரைக்கு சென்ற மகிந்த அங்கு சில மீற்றர்களுக்கு ஒரு இராணுவ வீரர்கள் இயந்திரத்துப்பாக்கியுடன் அணிவகுத்து காவல் காக்க துருப்புக்காவி கவசவாகனத்திலும் பயணம் செய்தார். அதன்பின்னர் அவர் தன்னுடன் கூட்டிச்சென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது:

விடுதலைப்புலிகள் பேச்சுக்களுக்கு வருவார்களானால் நான் அரசியல் தீர்வை வழங்குவேன் ஆனால் விடுதலைப்புலிகள் அதற்கு மறுத்தால் அவர்களை தோற்கடிப்பேன். நான் இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை ஆனால் எனது நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் திருமலை கடற்படைத்தளத்திற்கு விஜயம் செய்த மகிந்த அங்கு நாட்டின் பாதுகாப்புச் சபையை கூட்டியதுடன், அவரது இரண்டாவது மகனின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு விளம்பரம் செய்திருந்தார்.


எனினும் கடற்படையில் இணைந்த அவரது மகன் ஜோசித ராஜபக்சா இரு வார பயிற்சியுடன் புலைமைப்பரிசில் பெற்று லண்டன் சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.