கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கருணா குழு மேற்கொண்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது
அண்மைய இராணுவ நடவடிக்கை காரணமாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களை கருணா குழு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை என தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இவ்வாறு கருணா குழுவால் சோதனையிடப்படுபவர்களில் பலர் பின்னர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சவுக்கடி பகுதியில் வைத்து கருணா குழுவால் கடத்தப்பட்ட 10 இளைஞர்கள் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உடனடி தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
எனினும் மிக அதிக எண்ணிக்கையானவர்கள் தொடர்ந்தும் கருணா குழுவால் கடத்தப்பட்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது
இதேவேளை காத்தான் குடியில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கும் கருணா குழு முயற்ச்சிப்பதாக மட்டக்களப்பு பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்
இவ்வாறான நடவடிக்கைகளை தொடர வேண்டாம் என கருணா குழுவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
மட்டக்களப்பு நகரில் உள்ள வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் வைத்தியசாலை போன்றவற்றிற்கு ஆயுதங்களுடன் செல்லும் கருணா குழுவினர் அங்கிருந்தவர்களை மிரட்டி கப்பம் வசூலித்து வருவதாவும் இவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா படைகள் பாதுகாப்பு வழங்குவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.






