[Tuesday February 06 2007 ]
யாழ்குடாநாட்டிற்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்குவதில் தாமதங்கள் ஏற்படுவதாக கூறிய சிறீலங்கா அரசு உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மைலிட்டியில் மூன்றாவது துறைமுகத்தை அமைத்துள்ளது.
இது தொடர்பாக சிறீலங்கா கடற்படைத்தளபதி கொமொடோர் வசந்த கரணாகொட தெரிவித்ததாவது:
காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய துறைமுகங்களுடன் மூன்றாவதாக மைலிட்டி துறைமுகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. முன்னர் மைலிட்டிப் பகுதியில் இருந்த துறைமுகம் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்கோள் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டிருந்தது. அதனை கடந்த 45 நாட்களில் 3 மில்லியன் ரூபாய்கள் செலவில் அரசு புனரமைத்துள்ளது.
இதன் மூலம் யாழ்குடாநாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும். சிறீலங்காவின் தேசிய கட்டுமான அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஜாதிக சேவையா என்ற திட்டத்தில் மைலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட மைலிட்டி துறைமுகத்தில் எம். வி. ஹைன்ட் - எம் என்னும் சரக்கு கப்பலில் இருந்து 246 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இதுவரை இறக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டில் உள்ள பருத்தித்துறை, காங்கேசன்துறை துறைமுகங்கள் கடற்புலிகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதால் படையினரின் நலன் கருதியே அரசும் சிறீலங்கா கடற்படையினரும் இணைந்து அவசரமாக 45 நாட்களில் மைலிட்டி துறைமுகத்தை புனரமைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Tuesday, February 06, 2007
மைலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 06, 2007





