Wednesday, February 14, 2007

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினருடன் இராணுவ மேஜருக்கு தொடர்பு.


[புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணத்திற்காக இராணுவ இரகசியங்களை வழங்கிய சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இராணுவ மேஜர், விடுதலைப் புலிகளுக்கு இராணுவ இரகசியங்களை வழங்கியதுடன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பிரதிப் பொறுப்பாளரான கபில் அம்மானுடனும் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவரை கைது செய்துள்ளதாக பிரதம நீதிபதி குசல சரோஜினி வீரவர்த்தனவிடம் சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கொலைக் குற்றம் ஒன்றை புரிந்த இந்த இராணுவ மேஜர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்ததாகவும் அப்போது அவர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த நியூட்டனை சந்தித்த போது நியூட்டனால் அவர் கபில் அம்மானுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மருத்துவ அதிகாரி, படையினர், காவல்துறை உறுப்பினர், இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை இராணுவ இரகசியங்களை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.