Thursday, February 15, 2007

சர்வகட்சி ஆலோசனைக்குழுவில் கலந்து கொள்ளுமாறுஅரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்க ஜே.வி.பி மறுப்பு .

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007][virakesari.lk]

ரணிலுடன் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண சந்திப்பு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றிற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண அந்தந்த கட்சி தலைவர்களை சந்தித்து நேரடியாக விடுத் துள்ளார்.சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் தங்களது பிரதிநிதியை மீண்டும் இணைத்துக்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர் வுத் திட்டம் தயாரிப்பதற்கு கட்சியின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறு அமைச்சர் திஸ்ஸ வித்தாரண மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்கவை நேற்று முன்தினமும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை நேற்றும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்..

அமைச்சரினால் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி முற்றாக நிராகரித்துவிட்டதுடன் நாட்டின் இறைமைக்கு பங்கத்தை ஏற்படுத்த கூடிய வகையிலான எந்த தீர்வு திட்டத்திற்கும் ஜே.வி.பி ஒருபோதும் துணை போகாது என்பதே கட்சியின் கொள்கையாகும் இதனால் இந்த சர்வகட்சி ஆலோசனை குழுவில் இணைந்து கொள்வதில் ஜே.வி.பிக்கு உடன் பாடில்லை என்று அமைச்சரிடம் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது..

இதேவேளை அமைச்சரினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவே கூடி தீர்மானிக்கவேண்டும் என்பதனால் சர்வ கட்சி ஆலோசனை குழுவில் கலந்து கொள்வது தொடர்பில் உறுதியான முடிவை தற்போதைக்கு வழங்க முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அழைப்பு குறித்து சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண கருத்து தெரிவிக்கையில் : வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சர்வகட்சி ஆலோசனை குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்றை சமர்ப்பித்துள்ளேன் திட்டத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சர்வ கட்சி ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கேட்டிருந்தேன்..

எனினும் இந்த குழுவிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி பிரதிநிதிகள் விலகிக்கொண்டனர். அந்த கட்சி பிரதிநிதிகளையும் இந்த ஆலோசனை குழுவில் இணைந்து கொண்டு தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே ஆலோசனை குழுவின் பிரதான நோக்கமாகும் அதற்காக அந்த கட்சி பிரதிநிதிகளை இந்த குழுவில் இணைத்து கொள்வதற்கு முயற்சிசெய்தேன்அதன் அடிப்படையில் ஜே.வி.பி பிரதிநிதியை இணைத்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தேன் எனினும் அந்த அழைப்பை அந்த கட்சி முற்றாக நிராகரித்துவிட்டது . இதேவேளை இவ்வாறா அழைப்பை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடம் நேற்று விடுத்தேன்.ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன் படிக்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டு விட்டதனால் இந்த ஆலோசனை குழுவில் மீண்டும் இணைந்து கொள்வது குறித்து கட்சியின் மத்திய குழுவே கூடி தீர்மானிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவித்தார் எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தீர்வு திட்டத்தை முன்வைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளேன். .

சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இதேவேளை அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு மாற்று யோசனைகளை முன்வைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று முன்தினமும் கூடி ஆராய்ந்துள்ளது அக்கட்சியின் மாற்று யோசனைகள் அடுத்த வார இருதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான மைதிரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண சமர்ப்பித்துள்ள தீர்வு திட்டத்திற்கு மாற்று யோசனைகள் சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள மக்கள் ஐக்கிய முன்னணி அமைச்சரின் யோசனைகளையும் ஏற்கனவே நிராகரித்து விட்டமை தெரிந்ததே . .