Saturday, February 03, 2007

கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து தெரிவிப்பேன்.!!!

[சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2007]


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் அண்மையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்நிலையில் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிதாக ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாக எனது கருத்தை கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தெரிவிப்பேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்திய, நேபாள நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று பிற்பகல் நாடு திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாக கட்சியின் தவிசாளரும் இதர பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இன்னும் சில நாட்களில் எனது கருத்தை தெரிவிப்பேன்.

எமது கட்சிக்குள் எழுந்த பிரச்சினை தொடர்பாக ஐக்கியப்பட்டு அதற்கெதிராக நாம் முகம் கொடுத்துள்ளோம். இந்த கட்சியை பாதுகாப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, பிரதேசசபை உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.

அத்துடன் நாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகண்டு கட்சியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், நாட்டு மக்கள் எம்முடனேயே இருக்கின்றனர் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.