Friday, February 09, 2007

சுயாதீன ஆணைக்குழுக்களை அரசு அமைக்க வேண்டும்: அமெரிக்கத் தூதுவர்.

[வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007]

சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவின் அரசு பாராளுமன்றத்தில் தற்போது கொண்டுள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி 17 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து பலப்படுத்த வேண்டும் என சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளேக் தெரிவித்துள்ளார்.

தன்னியக்க வாக்காளர் பதிவுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிளேக் மேலும் தெரிவித்ததாவது:

அரச அதிபர் பாராளுமன்றத்தில் அண்மையில் பெற்றுள்ள பெரும்பான்மை பலத்தின் மூலம் ஒரு அரசமைப்புச் சபையை நிறுவுவதன் ஊடாக தேசிய காவல்துறை ஆணையகம், தேர்தல் ஆணையகம், பொதுநிர்வாக சேவை ஆணையகம் என்பவற்றிற்கு மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கமுடியும்.

இது தேர்தல் முறைகளை மேலும் பலப்படுத்துவதுடன், சுயாதீனமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கும் வழிவகுக்கும். கணணிமயமாக்கப்பட்ட தேர்தல் முறையும் சிறீலங்காவிற்கு அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்.