Wednesday, January 10, 2007

அரசியல் தீர்வு முயற்சியை விரைவுபடுத்துங்கள்:

அரசியல் தீர்வு முயற்சியை விரைவுபடுத்துங்கள்: மகிந்தவிடம் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா அரசு இராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கிய அதே சமயம் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிகளில் தீர்வு காணும் நடவடிக்கைகளை மந்தமாக்கியுள்ளது என்று நேற்று செவ்வாய்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3-5 வரை நடைபெறவுள்ள 14 ஆவது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை மகிந்த ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது, இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பான இந்திய அரசின் கருத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சரின் ஊடாக தெரிவிக்க இந்தியா முயன்றுள்ளது. இராணுவத்தீர்வுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு கிடைக்கப்போதில்லை. அரசு அரசியல் தீர்வு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். வடக்கு - கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களை இந்தியா தீவிரமாக கருத்தில் எடுத்துள்ளது. மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அரசுக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் ஆதரவு உண்டு. வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரித்தது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று முகர்ஜி தெரிவித்தார். எனினும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாகவும், பொதுமக்களை தாக்குவதாகவும் வழமை போல இந்த சந்திப்பின் போது மகிந்த, விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டவும் தவறவில்லை. இந்த பயணத்தின் போது முகர்ஜி, பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரமநாயக்கா, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகின்றது.