Sunday, December 24, 2006

சர்வதேச செஞ்சிலுவைக் குழு வணிகக்கப்பல் மாலுமியினரை...

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி விசாரித்த போது எமது நிலையை தெரிவித்தோம். அப்போது அவர்கள், தாங்கள் விடுதலைப் புலிகள் என்றும் இந்தப் பகுதி தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறிய பின்னர் அவர்கள் தமது படகுகளில் எம்மை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சிறிலங்கா அரசு கப்பல் விவகாரம் பற்றி மேற்கொண்டு வருகின்ற பரப்புரை பற்றிக் கேட்டபோது, அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றும் ஆனால் தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு தற்போது மகிழ்வாக இருப்பதாகவும் தெரிவித்தார். கப்டனாகிய தான் கப்பல் நிறுவனத்துக்கு நிலைமையைத் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தமது மாலுமிகள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடி விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது எந்த ஒரு குறையும் இல்லாமல் விடுதலைப் புலிகளால் தாங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும் தமது குடும்பத்தினருடன் இணையும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கப்பல் கப்டன் மற்றும் மாலுமிகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட மாலுமிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் தொடர்புகளை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர். ஜோர்தான் நாட்டிற்குரிய "ஃபாரா - 3" என்ற சரக்குக் கப்பல் இயந்திரம் செயலிழந்த நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை கடற்புலிகளால் காப்பாற்றப்பட்டு மாலுமிகள் மீட்கப்பட்டனர். கப்பல் முல்லைத்தீவு கடற்பரப்பில் தரை தட்டியுள்ளது. முற்று முழுதாக இயந்திரம் செயலிழந்த நிலையில் கப்பல் நகரவே முடியாத சூழலில் அது முல்லைத்தீவு கரையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது கடல் புலிகளால் அதன் மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர். ஈராக், ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பலின் மாலுமிகள் 25 பேரையும் அவர்களின் உறவினர்களுடன் இணைப்பதற்கான தொடர்புகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர். மாலுமிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலுமிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைப்பதற்கான தொடர்புகளை தாம் ஏற்படுத்தி வருவதாக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.