Monday, December 18, 2006

கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப்...

கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப் புலிகள் அல்ல: இளந்திரையன் கிழக்கில் எமது பகுதியிலிருந்து எங்களை வெளியேற்ற சிறிலங்கா இராணுவம் திட்டத்தை அறிவித்தால், விடுதலைப் புலிகள் முன்தாக்குதலைத் தொடங்குவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டிய இராணுவம், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டுவோம் என தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் மோட்டார் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகத்தான் வாகரையிலிருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். எறிகணை மற்றும் வான் தாக்குதல்கள் பல, அகதி முகாம்களைத் தாக்கியதில் பொதுமக்கள் பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களை நாங்கள் கட்டாயப்படுத்தி அவர்களைப் பிடித்து வைக்கவில்லை என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் விடுதலைப் புலிகள், பொதுமக்களை கட்டாயமாகப் பிடித்து வைக்கவில்லை என்றே சாட்சி கூறியுள்ளனர். வாகரையில் தொடரும் மனிதாபிமானம் அற்ற தாக்குதல்களால் இதுவரை 17,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். கடல் வழியாகவும் காட்டுப் பாதை வழியாகவும் பல சிரமங்களுக்கிடையே பொதுமக்கள் வாகரையிலிருந்து வெளியேறி வருகின்றனர். வாகரையிலிருந்து வெளியேற்றும் இராணுவத்தின் திட்டம், விடுதலைப் புலிகளை வெளியேற்றும் திட்டமல்ல, அங்கு இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டமே என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். நாங்கள் எல்லா வகையிலும் போராடுவோம். சிறிலங்கா அரசு ஏற்கனவே முழுமையான போரில் இறங்கி விட்டது. இருதரப்பும் தாக்கினால்தான் போர்நிறுத்தம். எம்மைத் தாக்குதவற்காக அரசு மேலும் படைகளைக் குவித்தால், நாம் முன்தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார். எனினும் முன்தாக்குதல் நடவடிக்கைகள், தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமே செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். puthinam.com