சிறிலங்காவின் உண்மையான முகத்தை மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை: வைகோ
சிறிலங்காவின் உண்மையான முகத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:"
இந்திய அரசாங்கம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறதா?"
"மன்மோகன்சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழகர்களுக்கு எதிராக எடுக்கவிருந்த பல நடவடிக்கைகளை எங்கள் இயக்கம் தடுத்திருக்கிறது. இதற்காகவே மன்மோகன்சிங் அவர்களை பிரதமர் பொறுப்பேற்ற பிறகு சுமார் 17 முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இலங்கை விவகாரம் தொடர்பாக பிரதமருடன் நீண்ட விவாதங்களிலும் ஈடுபட்டிருக்கிறேன். அதன் விளைவாகத்தான் பல மாதங்களுக்கு முன்பு இந்திய-சிறிலங்கா அரசுகள் செய்து கொள்ளப்போன இராணுவ ஒப்பந்தம் தடுக்கப்பட்டது.
தற்போது இந்திய அரசு, சிறிலங்கா கடற்படைக்காக வெடிமருந்துப் பொருட்களை அனுப்பியிருப்பது ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி முழுமையாக நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இடத்தில் பழைய சம்பவம் ஒன்றை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொழும்பு நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தைச் சோதனையிட்ட இந்திய அதிகாரிகள், அதில் ஏராளமான நவீன ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அந்த விமானத்தை சிறைவைத்தனர். ஆனால், அப்போதைய மத்திய அரசு, 'அந்த விமானத்துக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது, அது கொழும்புக்குப் போய் பத்திரமாகத் தரையிறங்க வேண்டும்' என்று திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு உத்தரவுகள் பிறப்பித்தது. இது அப்போது உலக அளவில் பெரிய பிரச்னையாக வெடித்தது.
அந்த விமானம் கொழும்பு நோக்கிப் புறப்படுவதற்கு முன்பாக அப்போது நடந்துகொண்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன். 'விமானத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் தமிழர்களின் உயிர்பறிக்கும் எமன்கள்' என்று சொன்னேன். ஆனால் என் வாதத்துக்கு பதில் சொன்ன மத்திய அரசோ, 'இன்னார் உயிரை எடுக்கத்தான் இந்த ஆயுதம் தயாரிக்கப்பட்டது என்று அந்த ஆயுதங்களின் மீது எழுதியிருக்கிறதா?' என்று கேட்டது. 'அப்படியானால் டெல்லி அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டார்களே, அவர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீது சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததா?’ என்று கேட்டேன். அனல் பறக்கும் விவாதம் அந்த சபையில் நடந்து கொண்டிருந்தபோதே அந்த விமானம் கொழும்பு நோக்கிப் பறக்கத் துவங்கி விட்டது. கிட்டத்தட்ட இப்போதும் அதே சம்பவம் தமிழகம் வழியாக அரங்கேறத் தொடங்கியிருக்கிறது."
"உங்களைப் போன்றவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, டெல்லிக்கு வந்த ராஜபக்ச நினைத்ததைச் சாதித்துவிட்டுதானே சென்றிருக்கிறார்?"
"உண்மைதான்! ராஜபக்ச டெல்லிக்கு வந்து, நினைத்ததைச் சாதித்துக் கொண்டுதான் திரும்பி இருக்கிறார். சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே அவர் வந்தார். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டவுடன், நம் முகத்தில் கரியைப் பூசிவிட்டு சிரித்த முகத்தோடு இலங்கைக்குத் திரும்பி விட்டார்.
இதை என்னால் எப்படி சொல்லமுடிகிறது என்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஒரு பேட்டியில் ராஜபக்ச சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான விடயம், 'இந்திய அரசாங்கம் எங்களுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது' என்பதுதான். ஆனால் இந்திய அரசாங்கம், சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளைச் செய்யாமல் ராஜபக்சவே அப்படியரு செய்தியை உலக நாடுகளுக்குப் பரப்பி ஈழத் தமிழர்களை இந்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பும் தந்திரத்திலும் ஈடுபடலாம் என்ற கோணத்தையும் இங்கே விட்டுவிட முடியாது.
இராணுவத்தை ஏவிவிட்டு தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொடூரம் ஒருபக்கமும், ஏ-9 சாலையை மூடி யாழ். பகுதி தமிழர்களை பட்டினிச்சாவுக்குத் தூண்டுவது இன்னொரு பக்கமுமென்றால், அண்மையில் 'பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்' என்ற ஒன்றை ராஜபக்ச அமல்படுத்தி இருக்கிறார். இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை உடனே நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டிய அவசியம் இல்லை. காவல்துறையும், அரச தலைவரும் நினைத்தபடியெல்லாம் கைதானவர்களை ஆட்டி வைக்கலாம்.
இந்தச் சட்டத்தில் இருபது முதல் முப்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகைகள் இருக்கின்றன. மேலும் கைது செய்யப்படும் நபர்களின் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களை அனாதைகளாக்கும் அளவுக்கு அந்த சட்டத்தில் இடம் இருக்கிறது. உலகத்தில் வேறு எங்குமே இந்த மாதிரியான பயங்கரச் சட்டம் அமலில் இல்லை.
இதையெல்லாம் மனதில் வைத்து, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறுகிறதா என்பதை ஆராய ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் ஜெனீவாவில் கூடியது. இதில் கலந்துகொண்ட பெரும்பாலான நாடுகள் குறிப்பாக சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாட்டுப் பிரதிநிதிகள், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அதில் கலந்துகொண்ட இந்திய நாட்டுப் பிரதிநிதிகள், 'இலங்கையில் எங்குமே மனித உரிமைகள் மீறப்படவில்லை' என்று சிறிலங்கா அரசுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய அரசு, ஈழத் தமிழர்களின் பிரச்னையில் நல்ல முடிவு எடுக்குமா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வரத் தொடங்கிவிட்டது."
"சரி, இதைப் பற்றியெல்லாம் நீங்கள் பிரதமரிடம் பேசினீர்களே... அதற்கு அவர் பதில் என்ன?"
"என்னைப் பொறுத்தவரை, ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் இலங்கை விவகாரம் தொடர்பாகவும் பேச வேண்டும் என்றால், பிரதமர் உடனடியாக அழைத்துப் பேசுகிறார். அதிலிருந்தே இலங்கை விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்க அவர் ஆசைப்படுகிறார் என்பது புரிகிறது. ஆனால், அவருக்கு இலங்கை விவகாரம் தொடர்பாகத் தகவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் சிறிலங்காவின் உண்மையான முகத்தை அவரிடம் எடுத்துச் சொல்வதில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்...
பிரதமர் அலுவலகம் அழைத்து, இலங்கையிலிருந்து பிரதமரைச் சந்திக்க டெல்லி வந்த தமிழர் பிரதிநிதிகளை, பிரதமரை சந்திக்க விடாமல் தமிழகத்தின் ஒரு அரசியல் தலைவரும், பிரதமரின் செயலாளர் ஒருவரும் சதி செய்தார்கள். இதை கடந்த மாதம் 24 ஆம் நாள் பிரதமரைச் சந்தித்தபோது கேட்டேன். 'இப்போதைக்கு அவர்களைச் சந்திக்கும் அவசியம் இல்லை என்று எனக்கு அதிகாரிகளால் சொல்லப்பட்டது' என்றார் பிரதமர்.
'தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களையோ, வெடிமருந்துகளையோ எந்த ரூபத்திலும் இந்தியா சிறிலங்காவுக்கு அனுப்பாது' என்று என்னிடம் பிரதமர் உறுதி அளித்தார். தற்போது சிறிலங்காவுக்கு வெடிமருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது உண்மையாக இருக்குமானால், அதில் பிரதமரின் பங்கு துளியும் இருக்காது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இதை அப்படியே மீண்டும் பிரதமர் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்."
"தமிழக முதல்வர், வெடி மருந்துப் பொருட்கள் போனது தொடர்பாக விசாரணைக்கு உத்தர விட்டிருக்கிறார். மத்திய அரசுடனும் பேசியிருக்கிறாரே?"
"எல்லாம் முடிந்தபிறகு விசாரணை எதற்கு? இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை எதுவோ அதுதான் என் கொள்கையும் என்று தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், இலங்கை விவகாரத்தில் அவருக்கென்று தனிக் கொள்கை கிடையாதா? தங்கள் அரசியல் வாழ்வுக்கேற்ற மாதிரியும், அதிகாரங்களுக்கேற்ற மாதிரியும் சில அமைப்புகள் இலங்கை விவகாரத்தை அவ்வப்போது கையில் எடுக்கும். ஆனால், எங்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெளிப்படையாக, போர்க்குணம் குறையாமல் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் பாடுபட்டு வருகிறது."
Thursday, December 14, 2006
சிறிலங்காவின் உண்மையான முகத்தை மன்மோகன் சிங்கிடம்..
Thursday, December 14, 2006





