Thursday, November 30, 2006

தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை

தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை தீர்த்துக்கட்டுகிறது அரசு - எஸ்.துரைரட்ணசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராகவிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமலை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: பல்குழல் பீரங்கிகள், ஷெல்கள், மோட்டார்கள், விமானத்தாக்குதல்கள் மூலம் தமிழ்மக்களும் அவர்களது இருப்பிடங்களும் வகை தொகை இன்றி அழிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இன்று நடப்பது என்ன? ஆட்கடத்தல், காணாமற்போதல், படுகொலை செய்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் என்பன திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. மக்களது குடியிருப்புகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு இந்த நாட்டில் எவருக்கும் அருகதை இல்லை. எமது கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. மூதூரில் 22 கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. வெருகல் ஈச்சிலம்பற்று பகுதிகளில் 23 கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 42 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகியுள்ளனர். 55 பாடசாலைகள் செயலிழந்துள்ளன. 20 ஆயிரம் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். யாழ். குடாநாட்டு மக்களுக்கும் வாகரை, கதிரவெளி பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அரசு ஊடகங்கள் மூலமே உணவு வழங்குகின்றது. அன்று ஏ 9 வீதியைத் திறப்பதற்காக போர் நடைபெற்றது. இன்று ஏ 9 வீதியை மூடுவதற்காக போர் நடைபெறுகின்றது. இதனால் எத்தனை ஆயிரம் படைவீரர்கள் பலியாகினர். இன்று தென் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம்தான் கேட்கின்றது. அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.