Tuesday, November 21, 2006

மக்களை அணிதிரட்டப் போவதாக ஜே.வி.பி. அறிவிப்பு

ஏ-9 ஐ திறப்பதற்கு எதிராக மக்களை அணிதிரட்டப் போவதாக ஜே.வி.பி. அறிவிப்பு இணைத் தலைமை நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்தே அரசாங்கம் ஏ-9 பாதையை திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு இடமளிப்போமானால் நாட்டின் ஏனைய முக்கிய விடயங்களிலும், அரசாங்கம் வெளிநாடுகளுக்கு அடிபணிந்தே தீர்மானம் எடுக்கும். எனவே, இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டப் போவதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி., விடுதலைப்புலிகள் தமது யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்களென்ற உத்தரவாதத்தை அரசிடம் வழங்கியுள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அரசாங்கம் ஏ-9 பாதையை திறப்பது தொடர்பாக ஜே.வி.பி.யின் அரசியல் சபை கூடி ஆராய்ந்து எடுத்த முடிவு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ-9 பாதையை ஒருபோதும் திறக்கப் போவதில்லையென பாதுகாப்புத்துறை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோஹண தெரிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் பாதையை திறப்பதற்கு தீர்மானத்தை எடுத்துள்ளது. சீரற்ற காலநிலையால் கப்பலில் பொருட்களை கொண்டு செல்ல முடியாதுள்ளதென்ற காரணத்தையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது. இத்தீர்மானம் எவரது அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டதென்பதை கண்டறிய வேண்டும். அத்தோடு, பாதை திறந்தால் அதனை யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதில்லையென்றும், யாழ். குடாநாட்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையென்றும் புலிகள் அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்கியுள்ளனரா, அதேநேரம், புலிகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்குமா, இக்கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாது. வாஷிங்டனில் இடம்பெறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே நாடுகளின் இணைத் தலைமைகள் என்ற புலிகளின் சார்பானவர்கள், ஏ-9 பாதையை திறப்பதற்கு அழுத்தத்தை கொடுப்பார்கள் என்ற வியூகத்தை அறிந்துகொண்டே அரசாங்கம் ஏ-9 பாதையை மனிதத்துவம் என்ற அடையாளச் சின்னத்தின் கீழ் திறந்துவிடப்போகிறது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னர் ஏ-9 பாதையை புலிகளே மூடினர். அப்போது சர்வதேசம் உணவுப் பற்றாக்குறையென கண்ணீர் சிந்தவில்லை. பாதையை திறக்க வேண்டுமென புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அரசு முன்வைத்த மாற்றுப் பாதைகள் தொடர்பாகவும் சர்வதேசம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், புலிகளின் கோரிக்கைக்கே அழுத்தம் கொடுக்கின்றார்கள். இணைத் தலைமை நாடுகள் இவ்வாறான அழுத்தங்களை வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாகும். அரசாங்கமும் அவ் ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்யவில்லை. தொடர்ந்தும் அதனை தொடர்ந்தால் இதுபோன்ற நிலைமையே உருவாகும் என்றும் ஜே.வி.பி.யின் அரசியல் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.