Wednesday, November 01, 2006

குடாநாட்டில் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு.

ஜெனிவா பேச்சு தோல்வியை அடுத்து குடாநாட்டில் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு. ஜெனிவா பேச்சுவார்த்தையை அடுத்து ஏ 9 பாதை திறக்கப்படும் இயல்பு நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் யாழ். குடாநாட்டின் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு இருந்த பொருட்கள் மீண்டும் தலை மறைவாகிய தோடு பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தையை முன்னிட்டு யாழ். குடாநாட்டின் வர்த்தக நிலையங்களில் சில உணவுப்பொருட்கள் அதிகரித்த விலையில் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் போக்குவரத்து சீரடைந்து உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் என்பதால் வர்த்தகர்கள் தாம் பதுக்கி வைத்திருந்த பொருட்களை அதிகரித்த விலையில் விற்பனைசெய்ததோடு வர்த்தக நிலையங்களில் உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கவில்லை. தரைவழிப்போக்குவரத்து நடைமுறைக்கு வராது என அறிவித்ததும் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீண்டும் மறைத்து வைத்து விட்டு அதிகரித்த விலையில் பேரம் பேசி பொருட்களை விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்களில் எல்லா வகையான உணவுப் பொருட்களையும் பேரம் பேசி மிக அதிகரித்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது பொது மக்களை சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது. தனியார் துறையினரால் யாழ்ப்பாணத்திற்கு எந்தப் பொருள்களும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிக்கு பின்னர் எடுத்து வரப்படாத நிலையில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் கிளை நிலையங்களுக்கு ஊடாக தனியாருக்கு முக்கியமான பொருட்கள் கை மாறுவதாக கூறப்படுகிறது.