போர்நிறுத்தம் தொடர்பில் பேசப்பட்ட விட யங்கள் எதுவுமே இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இந்த விடயங் களை இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலி களும் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பொரு ளாதார, சமூக, அரசியல் ரீதியில் அனைத்து விடயங்களிலுமான ஆதரவை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நோர்வே சர்வதேச அபிவிருத்திஅமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அங்கு ஆற்றிய தொடக்க உரைவருமாறு: இலங்கையில் இரண்டு தரப்பினராலும் நடத்தப்படுகின்ற மனிதப்படுகொலைகள் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் துர்ப்பாக்கியகரமானது. இதனை சர்வதேச சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காது.ஏற்கெனவே நடத்தப்பட்ட இத்தகைய பேச்சுக்களின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இரண்டு தரப்பினரும் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் எதைப்பற்றி பேசப்போகிறீர்கள் என்பதற்கு அப்பால் தமிழ் சிங்கள முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சினையான மனித உரிமைகள் பற்றியும் ஒரு இனம் அல்லது சமூகம் அல்லது மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை எவ்வாறு அனுபவிக்க வேண்டுமென விரும்புகிறார்களோ அதைப்பேசுவதுதான் சிறப்பாக இருக்கும். புனர்வாழ்வு மேம்பாடு, மீள்நிர்மானத்துக்கான உதவிகளை இருதரப்புக்கும் வழங்க சர்வதேச சமூகம் தயாராக உள்ளது. இருதரப்பினரும் தங்கள் தரப்பின் அவலங்களைப் புரிந்து கொண்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும். இந்தத் தீர்வுகளுக்கு இருதரப்பும் ஒத்துழைப்பை வழங்காது போனால் இத்தகைய பேச்சுக்கள் துர்ப்பாக்கியமானதாக அமையும். லெபனான் படுகொலைகள் பாலஸ்தீன முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு தீர்வுகாணும் சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில்தான் சர்வதேச சமூகம் விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் எதை எதிர்பார்க்கிறது மற்றொரு சமூகம் அந்த எதிர்பார்ப்புக்கேற்ப எதனை வழங்க உள்ளது என்கிற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை அமையுமேயானால் அடுத்தகட்ட பேச்சுக்கான சமிக்ஞையாக இருக்கும் .





