பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து தரப்பினரும் ஜெனிவாவில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பேச்சுவார்த்தை இடம்பெறும் இடத்திற்கு நேற்றுக்காலை வந்த அரச தரப்புக்குழுவினரும், புலிகள் தரப்பு குழுவினரும் எதுவித பாகுபாடின்றி அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைசெய்யப்பட்ட பின்னரே பேச்சு இடம்பெறும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், பேச்சுவார்த்தை செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.நீண்ட நேர பரிசோதனையின் பின்பே பேச்சுவார்த்தையின் ஆரம்ப நிகழ்வு மண்டபத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவோர் சென்ற வழியூடாக ஊடகவியலாளர்களை மாநாட்டு மண்டபத்திற்குள் அனுமதிக்காத பாதுகாப்பு அதிகாரிகள், வேறு ஒரு வழியூடாகவே ஊடகவியலாளர்களை மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.





