பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு அடிப்படையாக அமையும் ஜே.வி.பி., ஹெலஉறுமயவை புறக்கணிக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் இணைந்து கொண்டமையானது நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நிரந்தர சமாதானத்தை கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமையும். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்பட முன்வந்தமையானது தெற்காசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் முக்கியத் திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் ஐ.தே. க.வுடன் இணைந்து செயற்படும் என்பதற்காக என்னை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறச் செய்த ஜே.வி. பி. யினையும் ஜாதிக ஹெலஉறுமயவையும் நான் புறக்கணித்ததாக அர்த்தப்படாது. அந்த கட்சிகளுடனான எமது சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்றைய தினம் தெற்காசிய நாடுகளின் அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்பும்னையாகும். அரசியல் கட்சிகளை விட நாடே முக்கியம் என்ற அடிப்படையில் இருப்பிரதானக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் பிரதான பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் முன்வந்துள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ தமது வரப்பிரசாங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்காது நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். இன்றைய இந்த நிகழ்வை எமது நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவே கருதுகின்றேன். நாங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிலர் எம்மை அவதானமாக செயற்படும்படி கூறினர்.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் இவ்வாறான யோசனைகள் கிடைத்திருக்கும் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாட்டில் காலடிவைத்துள்ளோம். நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதற்கு இரு பிரதானக் கட்சிகளும் முனைப்புடன் செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இரு பிரதானக் கட்சிகளின் ஒன்றிணைவின் மூலம் நன்மைகளும் தீமைகளும் ஏற்படலாம். ஆனால் நாம் நாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக ஜே.வி.பி., ஜாதிக ஹெலஉறுமயவும் கணிசமான பங்களிப்பை வழங்கின. தற்போது எமது அரசாங்கம் ஐ.தே.க. வுடன் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்துகொண்டுள்ளது.
அதற்காக மேற்படி இருக்கட்சிகளையும் நாங்கள் புறக்கணித்ததாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்திலேயே நாம் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இருக்கட்சிகளுடனான எமது சுமுகமான உறவுதொடர்ந்து நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமுள்ள அமைதியான நாடொன்றை கையளிக்க வேண்டிய எமது பொறுப்பாகும்.
அதற்கான முயற்சிகளே நாம் எடுத்து வருகின்றோம். இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைவதற்காக இருகட்சிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இரண்டு குழுவினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவரும் செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சீனப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இருப்பினும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் சந்திப்பையும் பொருட்படுத்தாமல் உடனடியாக நாடு திரும்பினார். அவரின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகின்றேன்.
Tuesday, October 24, 2006
பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு
Tuesday, October 24, 2006





