Friday, September 29, 2006

நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர்.நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்புக்குச் சென்றோர் குறித்து கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். தொழில், தொழில் பயிற்சி அமைச்சு இளைஞர்களி டம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை தொழில் நிமித்தம் மலேஷியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் இலங்கை திரும்பியுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள வங்கிக்கடனை செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். இது குறித்து அமைச்சு என்ன நடவடிக்கை மேற் கொண்டுள்ளதென தயாசிறி விஜேசேகர கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கே பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பதிலளிக்க முடியாதென்றார்.குருநாகல் மாவட்ட ஜே.வி.பி. உறுப்பினர் விமல் ரத்நாயக்க இச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார். எமது மாவட்டத்திலேயே அதிகமான இளைஞர்கள் மலேஷியா சென்று திரும்பியுள்ளனர். எனவே இது குறித்து அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த நிலையில், பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா உரிய பதிலை அளிக்காததால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில் சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா இது குறித்து அரசு முறையாக கவனம் செலுத்தும் என உறுதியளித்ததை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.