Thursday, August 31, 2006

மூதூரில் ACF நிறுவனத்தின் பணியாளர்களை படையினரே கொன்றனர்-கண்காணிப்பு குழு. திருமலை மூதூர் நகரில், பிரான்ஸ் acf நிறுவனத்தின் பதினேழு பணியாளர்களையும் சிறீலங்கா படையினரே படுகொலை செய்திருப்பதாக, கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கண்காணிப்புக் குழு தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், acf நிறுவனத்தின் பதினேழு பணியாளர்களையும், சிறீலங்கா படைகளை தவிர வேறு எவரும் படுகொலை செய்திருக்க முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் பதினேழு மனிதநேயப் பணியாளர்களையும் படுகொலை செய்ததன் மூலம், போர்நிறுத்த உடன்படிக்கையை பாரிய அளவில் சிறீலங்கா படைகள் மீறியிருப்பதாகவும், கண்காணிப்புக் குழு தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை, திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரச படைகள் நிகழ்த்தியிருப்பதாகவும், கண்காணிப்புக் குழு தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.