Friday, April 01, 2011

தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைக்கும் முயற்சியில் பொபி – வித்தியாதரன் கூட்டுச் சதி!

போராட்டப் பின்னடைவின் பின்னர் எமது தேசம் மறுமுகங்கள் பலவற்றை நாளாந்தம் கண்டுகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதிகாரப் போட்டி, சுயநலம், மாவீரர்களைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது, விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பது என்ற போர்வையில் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது என்று பலரது மறுமுகங்கள் வெளிப்பட்டவண்ணமே உள்ளன.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் சுவடுகளைப் பின்பற்றி அரசியல் செய்யத் தலைப்பட்ட சிலரது முகங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு உணரப்பட்டமையாலும், சரியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றமையாலும் இந்தப் பத்தியினை எழுதவேண்டிய சூழல் எம்மால் எதிர்கொள்ளப்படுகின்றது.

அரசியல் செய்வது என்பது ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட ஜனநாயக உரிமையாகும். ஆனால் அரசியல் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்ற பாதை என்பது சரியானதா? அரசியல் நீரோட்டத்தில் உள்ள கட்சிகளை உடைத்து, அவற்றினை சரியான பாதையில் இட்டுச்செல்கின்றோம் என்ற மாயையை ஏற்படுத்தி திசைதிருப்பி புதிய கட்சி ஒன்றை உருவாக்கத் தலைப்பட்டுள்ள சில முக்கிய நபர்கள் பற்றிய ஆதாரங்கள் சரிதம் இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த இடத்தில் உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசியர் என்.வித்தியாதரன் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்டவருமான பொபி அல்லது வழுதி என்பவரும் இணைந்து புதிய கட்சி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கான விடயங்கள் குறித்தே ஆராயவுள்ளோம்.

பொபி/வழுதி

பொபி அல்லது வழுதி என்கின்ற நபர் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது பின்னணி தமிழ்த் தேசிய இனத்தின் பிரதான எதிரிகளாக விளங்கிவருகின்ற இந்தியாவின் றோவின் பின்னணியிலேயே செயற்பட்டிருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.

பொபி என்கின்ற நபர் 1990களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உத்தியோக பூர்வ பத்திரிகையான விடுதலைப்புலிகள் பத்திரிகையின் துணை ஆசியராகப் பணியாற்றியிருந்தவர். அமைப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடல் மார்க்கமாக படகு மூலம் இந்தியாவிற்கு அகதியாகச் சென்றிருந்தார். அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் துரிதமாக வெளியேறியிருந்தமை, அவர் முகாமில் இருந்து வெளியேற உதவி புரிந்தவர்கள் யார்? போன்ற கேள்விகள் அன்று எழாத போதிலும் அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தற்போது வெளிவருவதை தவிர்க்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

பொபி என்கின்ற நபர் தற்போது தேசிய விடுதலைப்போராட்டத்தின் அழிவிற்கான பிரதான நபர் அவர் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் மிக நேர்த்தியான பாதையில் அளவிட முடியாத தியாகங்களைக் கொண்ட தேசியவிடுதலைப் போராட்டம், அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நபரை நம்பி அழிவடைந்ததாக சொல்லப்படுகின்ற கருத்து நிலைப்பாட்டுடன் முற்றுமுழுதாக உடன்பட முடியாது. ஆனாலும் அவர் வன்னிப் போரின் இறுதிப் பகுதியில் எவ்வாறு மூக்கை நுழைத்தார் என்பதற்கான சான்றுகளை வெளிப்படுத்த முடியும். அவர் விடுதலைப்புலிகளுடன் மீண்டும் தன்னை நெருக்கமானவராகக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்திய நபர் சு.ரவி என்ற விடுதலைப்புலிகள் ஆசிரியர் ரவி என்பவராவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரவி பொபியுடனான தொடர்பினை ஏற்படுத்துகின்றார். அதன் பின்னர் பொபி உட்பட்ட நபர்கள் அமெரிக்காவின் உயர் மட்டத்தினருடனான தொடர்பினை வலுவாக்கியிருக்கின்றனர். குறிப்பாக கிளாரி கிளிங்டனுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர் போன்ற கருத்துக்களை சு.ரவி தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததை அறிந்த பெருமளவானவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றனர்.

சு.ரவி

விடுதலைப்புலிகள் தொடர்பிலான விடயங்களை உடனுக்குடன் இந்தியா பெற்றுக்கொள்வதற்கு பொபி அதாவது வழுதி ரவி ஊடாக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார். போர் நெருக்கடிகளை எதிர்கொண்ட 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சு.ரவி தனது குடும்பத்தினருடன் அம்பலவன் பொற்கணைக் கிராமத்தின் ஊடாக இராணுவத்தினரிடம் சரணடைகின்றார். அம்பலவன் பொற்கணைக் கிராமம் இராணுவத்தினால் துண்டாடப்படுவதற்கான ஆபத்து நிலை மக்களாலேயே பல நாட்களுக்கு முன்னரே உணரப்பட்டிருந்தது. அவ்வாறான மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் முள்ளிவாய்க்கால் நோக்கி அவசர அவசரமாக நகர்ந்தமை சு.ரவி குடும்பத்தினருக்கு இன்னமும் நினைவிருக்கலாம். சு.ரவி 25ஆண்டுகளுக்கு மேலாக அமைப்பில் இருந்தவர். அவர் விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளரும் கூட அவர் பம்பைமடு தடுப்பு முகாமில் புதிய போராளிகளுடன் தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன் முதற் தொகுதிப் போராளிகள் விடுவிப்பின் போதே விடுதலையானதன் பின்னணியில் பொபி அல்லது கேபி குழு இருக்கின்றமைக்கான ஆதாரங்களை அவரே தற்போது வெளிப்படுத்தியிருக்கின்றார். (கே.பியின் புனர்வாழ்வு அமைப்பின் மக்கள் சந்திப்புக்களில் அவர் தற்போது பிரதான பேச்சாளராக செயற்பட்டு வருகின்றார்)

இதேவேளை இலங்கையின் தேசிய பத்திரிகை ஒன்று விற்கப்படப் போவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது தெரிந்ததே. அதே பத்திரிகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நன்மை தீமைகள் தொடர்பிலான தொடர் கட்டுரை ஒன்றினை எழுதும் நடவடிக்கையில் சு.ரவி ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அந்தக் கட்டுரையினை தொடராகப் பிரசுரிக்க வேண்டும் என்று குறித்த பத்திரிகையின் யாழ்ப்பாண ஆசிரியர் பீடத்திற்கு அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புதினம்

போர்க்காலத்தில் வன்னியின் கள நிலவரங்களை உடனடியாக அறிந்து கொள்வதற்கு பொபி மேற்கொண்ட மற்றொரு உத்தி வன்னியின் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுடனான தொடர்பினை ஏற்படுத்தியமை. குறித்த இலத்திரனியல் ஊடகத்திற்கும் புதினம் இணையத்திற்கும் மிக மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. குறித்த இலத்திரனியல் ஊடகத்திற்கும் புதினம் இணையத்திற்குமான தொடர்பினை கனடாவில் உள்ள வானொலி ஒன்றின் நிர்வாகியே ஏற்படுத்திக் கொடுத்தார். புதினத்தின் தொடக்கம் முதல் வன்னிப் போரின் இறுதிவரையில் புதினத்திற்கான தாயகச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியது குறித்த இலத்திரனியல் ஊடகமே. தாயகத்தில் இருந்து தகவல்களை வழங்கிய இலத்திரனியல் ஊடகத்தினர் நம்பிக்கையின் அடிப்படையில் பல விடயங்களை புதினம் நிர்வாகிக்கு வழங்கியிருப்பதற்கான சான்றுகளும் உள்ளன. புதினம் நிர்வாகிக்கும் பொபி என்பவருக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருந்தமைக்கான சான்றானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்திற்கான தீவிர செயற்பாட்டாளராகக் காட்டிக்கொண்ட திரு பொபி தற்போது தாயகத்தில் மிக இயல்பாக திரிவதற்கும், அரசியல் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் இலங்கை அரசும் அரச புலனாய்வு அமைப்புக்களும் என்ன காதில் பூவைத்தவர்களா?

பொபி என்கின்ற நபர் இந்தியாவில் றோ அதிகாரிகளைச் சந்தித்து இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டுவருவதுடன், இந்தியாவின் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்ட முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரனுடன் இணைந்து அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

வித்தியாதரன்

வித்தியாதரன் என்கின்ற முன்னாள் உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியர் தொடர்பில் தமிழ்த் தேசியப்பரப்பில் பரவலான எதிர்ப்பலைகள் உள்ள போதிலும், சரியான ஊடகம் இன்மை ஏன் வம்பு போன்ற காரணங்களால் அவரது மறுபக்கங்கள் பல வெளிவராமலேயே மறைந்துபோய்விட்டுள்ளன.

திரு சரவணபவன் அரசியலில் ஈடுபடப் போவதாக முடிவெடுத்ததனை அடுத்து அரசியல் ஆர்வம் அற்றவரான தான் குறித்த பத்திரிகையில் இருந்து வெளியேறியதாக வித்தியாதரன் தெரிவித்து வருகின்றார். உண்மையில் அவர் குறித்த பத்திரிகையில் இருந்து வெளியேறியதே ஒரு அரசியல் என்றும், அதனைப் பயன்படுத்தி தானும் அரசியல் செய்யலாம் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்றும் எண்ணும்படியான பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன.

கொழும்பு தமிழ்ச் சங்க வளாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் சென்றிருந்த வித்தியாதரன் அங்கிருந்தவர்களை அணுகி சிறீதரனிடம் வித்தியாதரன் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்குமாறு நிர்பந்தித்து அவர்கள் சிறீதரனிடம் அவ்வாறே கேள்வி எழுப்பினார்கள் என்றும் சிறீதரனின் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் தொடர்பில் உடனடித் தகவல்களைத் தரவல்ல ஒரு நேர்மையான நபர் வித்தியாதரன் என்று றோ அதிகாரிகள் புகழும் அளவிற்கு பெருமைக்குரிய அவரை இந்தியாவிலும், இலங்கையிலும் றோ அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்திவருவதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இனத்திற்கு தீர்வு தருமாறு தான் அவர்களைச் சந்தித்துக் கோரிக்கை விடுவதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதேவேளை வித்தியாதரன் முதலமைச்சராவது தொடர்பில் உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது உண்டா என்று இந்தியாவை நம்பியிருக்கின்ற கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் இந்திய உயர் அதிகாரி ஒருவர் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து உடைந்து போன கூட்டமைப்பை உடைப்பதற்கு வித்தியாதரன் கடும் பிரயத்தனப்பட்டிருக்கின்றார். அவர் தனது பிரதான எதிரிகளாகக் கூறிக்கொள்கின்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் உட்பட்டவர்களை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பினை எதிர்த்துப் போட்டியிட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட்டவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியினை இல்லாமல் செய்வது ஆகிய இரண்டு விடயங்களையும் இலக்காகக் கொண்டு வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார்.

இதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் முக்கியஸ்தர் வரதராஜனுடன் பல சுற்றுப் பேச்சுக்களை அவர் மேற்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பில் இருந்து சிலரை வெளியேற்றுவோம் அதன் பின்னர் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவித்த வித்தியாதரன் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மறுப்புத் தெரிவித்தை அடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியே வருமாறும், புதிய கட்சி ஒன்றினை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடராக பொபி என்கின்ற வழுதி யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடி புதிய கட்சி ஒன்றினை அமைக்க முன்வருமாறு அழைப்பு விடுத்திக்கின்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்ற கொள்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. சாத்தியமற்ற கொள்கையினைக் கைவிட்டுவிட்டு புதிய கட்சி அமைக்க முன்வருமாறு வலியுறுத்திய பொபி இரண்டு நாட்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார். குறித்த சந்திப்பின் போது புதிய கட்சி ஒன்றை அமைப்பதாயின் அந்தக் கட்சியின் கொள்கை என்ன? என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியிருக்கின்றது. அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறியதாக தெரியவருகின்றது. சந்திப்பின் முடிவில் வித்தியாதரனே இந்தச் சந்திப்பினை மேற்கொள்வதற்கான ஆலோசனையினை தனக்கு வழங்கினார் என்றும் பொபி கூறியிருக்கின்றார்.

இதேவேளை வரதாஜனைச் சந்தித்த பொபி(வழுதி) மறு முறை சந்திப்பின் போது வித்தியாதரன் உங்களைச் சந்திப்பதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா? என்று கேட்டிருக்கின்றார். அதற்கு ஆட்சேபனை இல்லை என்று வரதராஜன் இல்லை என்று தெரிவித்ததை அடுத்து பொபியுடன் வித்தியாதரனும் வரதராஜன் வீட்டிற்குச் சென்று புதிய கட்சி அமைப்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதித்ததாக வரதராஜனே எமது ஆசியர் பீடத்திற்குத் தெரிவித்திருக்கின்றார்.

ஆக, எந்தவித அப்பழுக்கற்ற ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும் இனத்திற்காக அயராது போராடி வருகின்ற ஊடகப் போராளியாகவும் தன்னைக் காட்டிவருகின்ற வித்தியாதரன் உண்மையான தேசியப் பற்றாளனாக இருந்தால் தமிழ்த் தேசியத்திற்காக இருக்கக்கூடிய எச்சங்களான கூட்டமைப்பினையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் உடைப்பதற்குப் பார்க்காமல் அவர்கள் அனைவருக்கும் இடையில் ஒற்றுமையினை ஏற்படுத்தவே முற்பட்டிருக்க வேண்டும். சரி ஜனநாயக அடிப்படையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவதாக இருந்தால் தேசவிரோத சக்திகளாக கருதப்படுகின்ற நபர்களுடன் இணைந்து ஏன் செயற்பட வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்ன? விடுதலைப் போராட்டத்திற்காக ஒன்றுதிரண்டு வீரச்சாவடைந்த மாவீரர்கள் தலைவர் பிரபாகரனை நம்பி ஒன்று திரளவில்லை என்றும் தாம் எழுதிய எழுத்தின் வலிமையாலேயே அவர்கள் ஒன்று திரண்டு போராடி வீழ்ந்தார்கள் என்றும் தெரிவித்துள்ள வித்தியாதரனின் நேர்மையின் விலை என்ன??

பொபி, வித்தி சந்திப்புத் தொடர்பில் வரதராஜன் தெரிவித்த ஆதாரங்கள், இந்த விடயம் தொடர்பில் வித்தியாதரன் தெரிவித்த கருத்துக்கள் என்பவற்றை அவர்களின் குரல்களிலேயே இணைக்கின்றோம். இந்தப் பத்தியினை அடுத்து வெளிவருகின்ற விமர்சனங்களை எதிர்கொள்ளவும் சரிதம் ஆதாரங்களுடன் காத்திருக்கிறது.

ஆசிரியர் பீடம்,

சரிதம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.