Tuesday, March 01, 2011

தமிழக – தமிழீழ மீனவர்களை பிளக்க முயற்சிக்கும் இந்திய – சிங்கள அரசியல் சதுரங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் பெறுவதற்கு நெடுங்காலம் முன்னரே தமிழீழ மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பும், பாசப் பிணைப்பும் இறுக்கமாக இருந்துவந்தது.

இந்த உறவு, யுத்த காலத்திலும் வலிமையாகவே தொடர்ந்தது.

தமிழீழ பிரதேசங்களில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார, மருத்துவ, எரிபொருள் தடைகளை எதிர் கொள்வதற்கான வழங்கல் பாதை இந்த இரு மீனவர்களினூடாகவும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளம் சேது சமுத்திரப் பகுதியில் இந்த இரு மீனவர் சமூகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டிருந்தது. இந்த ஆதரவுத் தளத்தினூடாகவே, விடுதலைப் புலிகளால் பலம் வாய்ந்த கடற்படையைக் கட்டி எழுப்ப முடிந்தது.

ஆனால், முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலத்தின் பின்னர் உருவான கள நிலை மாற்றத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலமும், கடற்படையின் பலமும் முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பின்னர் இந்திய – சிறிலங்கா ராஜதந்திரத்தின் ஆடு களமாக சேது சமுத்திர பிராந்தியம் மாற்றம் அடைந்துள்ளது. தமிழீழ தமிழக மீனவர்களிடையே மோதல்களையும், நிரந்தர பகையுணர்வையும் ஏற்படுத்துவதனூடாக இரு நாடுகளும் கடல்வலயப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றமை வெளிப்படையானது. இதற்கான ஊக்கங்கள் இரு தரப்பு அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சரணடைந்த விடுதலைப் புலிகளில் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் சதித்திட்டம் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், தமிழீழ – தமிழக மீனவர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். குறிப்பாக தரையிலோ, கடலிலோ சுயமாக இயங்குவதற்கு முடியாத வகையில் சிங்களப் படைகளின் கொடும் பிடியில் சிக்கியுள்ள தமிழீழ மீனவர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்த முயல்வது போன்றும், தமிழக மீனவர்களைத் தாக்குவது, சிறைப்படுத்துவது போன்றும் செயற்படுவது இயல்பான சம்பவங்களாகத் தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் வைத்துத் தாம் மனித வதைக்குள்ளாக்கப்பட்ட காலங்களில் தமிழக மக்கள் முழுமையான எழுச்சி கொள்ளாததும், தமிழீழ மக்களது அழிவை வேடிக்கை பார்த்ததும் தமிழீழ மக்களது மனங்களில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், கடலோரக் கிராம மக்களின் வாழ்நிலையைப் புரட்டிப்போட்டுள்ள நிலையில், தற்போது சிறிது மூச்சுவிட அவகாசம் கிடைத்துள்ள இன்றைய காலப் பகுதியில் தமிழக மீனவர்களின் எல்லை கடந்த தொழில் முயற்சிகள் நொந்து போன அவர்களது இதயத்தில் வலியை ஏற்படுத்துவது இயல்பானதே. ஆனாலும், இந்த எல்லை கடந்த தொழில் முயற்சியில் மீனவர்கள் தமிழகத்தின் படகு உரிமையாளர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என வெளிவரும் செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழீழ மீனவர்களின் ஆதங்கங்களையும், இயலாமையையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட வறுமை நிலையையும் சிங்களப் படையினர் தாராளமாகக் கையாண்டு வருகின்றனர் என்பதையும் தமிழக தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியாவது சேது சழுத்திரப் பகுதியில் ஒரு எல்லைக் கோட்டை உருவாக்கும் திட்டத்துடனான இந்திய – சிங்கள அரசுகளின் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டு வரும் இந்த மோதல் நிலை குறித்து தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.

இது குறித்த செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள் இரு தரப்புத் தமிழர்கள் மத்தியிலும் அதிருப்திகளை விதைப்பதாகச் செயற்படக் கூடாது. தமிழகமீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கியதாக இந்தியாவின் சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் தாக்கம் எத்தகையது என்பதை அந்த ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லை.

‘தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி?, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர்.

இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது. ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

சமீப காலமாக இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அதற்குக் காரணம் கூறப்படுகிறது.

சமீபத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களை சிறை பிடித்த இந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், இப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை நடுக் கடலில் தாக்கி சரமாரியாகத் தாக்கி அவர்களது வலைகளையும் அறுத்து கடலில் வீசி விரட்டியுள்ள செயல் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக் கடலில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்குதகல் நடத்தினர். பின்னர் மீனவர்களின் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்து வீசினர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக திட்டி, விரட்டியுள்ளனர். இலங்கைத் தமிழ் மீனவர்களின் இந்த வெறிச் செயல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.’ என்று ஒரு இணையம் ஊடக தர்மத்தை மீறிய செய்தியை வெளியிட்டுள்ளது.

சேது சமுத்திரப் பகுதியில் தமிழர்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தும் இரு நாட்டுச் சதி முயற்சிகளைப் புரிந்து கொள்ளாமல், அவர்களது சதுரங்க விளையாட்டில் தமிழர் நலன்களைப் புதைக்கும் முயற்சியிலிருந்து தமிழ் ஊடகங்கள் விடுபட்டுக் கொள்ள வேண்டும். தமிழீழ மக்களின் அவலங்களையும், அவர்கள் மீதான அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் புரிந்து கொண்டு, கடல் பிரித்த இரு தமிழ்ச் சமூகமும் இணைந்து பலம் பெறுவதற்கான அனுசரணைகளை தமிழ் ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

- தமிழ்ச்செல்வன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.