கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் உள்ள 200 ஏக்கர் நிலத்தை வடமாகாண ஆளுநரும், முன்னாள் யாழ் மாவட்ட இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா இராணுவ நிர்வாகம் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் இருந்தே இந்த காணிகளை சிறீலங்கா அரசு சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த பண்ணை காணிகளில் மீள்குடியமர்வதற்கு தமிழ் மக்களுக்கு சிறீலங்கா இராணுவம் அனுமதிகளை மறுத்து வருகின்றது.
ஆனால் அங்கு செல்லும் சிங்கள வர்த்தகர்கள் தாம் விரும்பும் நிலங்களை தெரிவுசெய்து வருகின்றனர். அதற்கான அனுமதிகளை வழங்குபடி சந்திரசிறீ சிங்கள இராணுவ அதிகாரிகளை பணித்துள்ளார்.
வன்னியில் உள்ள பெருமளவான நிலங்களை சிறீலங்கா அரசு சிங்களவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது. முறுகண்டி பிள்ளையார் ஆலயச் சுற்றாடலில் உள்ள நிலங்களையும் தற்போதைய யாழ் மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் சிங்களவர்களுக்கு முன்னர் வழங்கியிருந்தார்.
அங்கு தற்போது பெருமளவான கடைகளை சிங்களவர்களே நடத்தி வருகின்றனர். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் முல்லைத்தீவின் கரையோரங்களில் பெருமளவான சிங்களவர்களை சிறீலங்கா அரசு குடியேற்றி வருகின்றது.
இதனிடையே, வடபகுதியில் எட்டு ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது. தமிழ் மக்களை சிங்கள முதலாளிகளின் கீழ் பணியாற்ற வைக்கவும், தமிழ் மக்களை காரணம் காட்டி மேற்குலகத்திடம் புடைவைப்பொருட்களை விற்பனை செய்யவுமே அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான நிலங்களை பெறுவதற்கு நிறுவனங்கள் சந்திரசிறியுடன் தொடர்புகொண்டுள்ளன. வவுனியா, ஓமந்தை, நெலுக்குளம், செட்டிக்குளம், அச்சுவேலி ஆகிய பகுதிகளில் நிலங்களை கைப்பற்றுவதற்கு அவை முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.