Thursday, February 10, 2011

தமிழ் மக்களிற்குச் சொந்தமான காணிகளை விற்பனைசெய்ய சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை.

தமிழ் மக்களிற்குச் சொந்தமான காணிகளை பல பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக, கொழும்பின் லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் (www.lankabusinessonline.com) என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. திருகோணமலை குச்சவெளியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை நட்சத்திர விடுதிகள் கட்டுவதற்காக அரசாங்கம் விற்பனை செய்ய இருக்கின்றது.

500 ஏக்கர் காணி 90 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (10 பில்லியன் ரூபா) விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இதேபோன்று தமிழீழத்தின் மேற்குப் பகுதியான புத்தளம் கற்பிட்டியிலுள்ள காணிகளை விற்பனை செய்வதற்கும் சிறீலங்கா அரசாங்கம் தனது சுற்றுலாத்துறை ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கற்பிட்டியில் ஏற்கனவே 10 செயற்கைத் தீவுகளைக் கட்டுவதற்கு வெளிநாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இவ்வாறு தமிழர்களின் காணிகளை விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவதன் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலிலுள்ள முப்படைத் தலைமையகத்தை அகற்றி அந்த இடத்தையும் ஹொங்கொங்கைத் தளமாகக்கொண்ட மற்றும் சீன அரச நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ள சிறீலங்கா அரசாங்கம் அதன் மூலம் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறவிருக்கின்றது.

குச்சவெளியில் 5 நட்சத்திர விடுகளைக் கட்டுவதற்கு 99 வருடங்கள் குத்தகைக்கு ஏக்கருக்கு தலா 20 மில்லியன் ரூபாவிற்கு 15 முதல் 20 முதலீட்டாளர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதை சுற்றுலாத்துறை தலைமை அதிகாரி நாலக்க கொடஹேவ (Nalaka Godahewa) உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.