விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுக்களில் அனுசரணையாளராகச் செயற்பட்ட நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்மை காட்டமாக விமர்சித்துள்ளது இலங்கை அரசு. ”சொல்ஹெய்ம் ஒரு தோற்றுப்போன அனுசரணையாளர். புலம்பெயர் தமிழருக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பாடல் நபராக அவரை ஒரு போதும் பயன்படுத்தப் போவதில்லை. அவருடைய சேவை எமக்கு தேவையே இல்லை” என்று சீறினார் பிரதமர் டி.எம்.ஜயரத்ன.
புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் “கலந்துரையாடல் பங்காளி”யாகத்தான் செயற்படலாம் என்று அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துக்கே பிரதமர் பதிலளித்துள்ளார். “சொந்த நலன்களுக்காகவே அனுசரணைப் பணிக்கு சொல்ஹெய்ம் முயல்கிறார். இனியொரு போதும் அதற்கு அனுமதிக்க மாட்டோம்” என்றார் பிரதமர். சொல்ஹெய்ம் விவகாரம் குறித்து பிரதமர் தெரிவித்ததாவது:
சொல்ஹெய்மின் உதவி அரசுக்குத் தேவையில்லை. எதிர்காலத்தில் அவரை அனுசரணையாளராகப் பயன்படுத்தும் நோக்கம் எதுவும் எம்மிடம் இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் சாதகமான பேச்சுக்களை இலங்கை அரசு நடத்தி வருகிறது.
அதில் மூன்றாம் தரப்பு ஒன்றின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சு நடந்த போது வெற்றகரமான அனுசரணையாளராகச் செயற்படுவதற்குத் தவறி இருந்தார். இனி ஒரு போதும் அவரைப் பயன்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை.
விடுதலைப் புலிகளுக்கு நிதி உட்பட புலம்பெயர் தமிழர்கள் வழங்கி வரும் உதவிகளை வெளிப்படுத்த இதுவரை சொல்ஹெய்ம் தவறி இருக்கிறார். தன்னுடைய சொந்த நலன்களுக்காகவே அவர் அனுசரணையாளராக முயற்சிக்கிறார். அதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். என்றார் பிரதமர்.
எனினும் அமைதிப் பேச்சுக்களின் போது தான் பக்கச் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதை அண்மையில் வெளியான விக்கி லீக்ஸ் செய்திகள் நிரூபித்திருக்கின்றன என்று சொல்ஹெய்ம் தான் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.