[வியாழக்கிழமை, 10 மே 2007] இந்திய அணு உலைகளுக்கு விடுதலைப் புலிகளின் வான்படையால் ஆபத்து ஏற்படக்கூடும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கருத்தைத் திருத்தும் வகையில் இந்தியாவுக்கு புலிகளால் ஆயுத மார்க்க அச்சுறுத்தல் இல்லை என தான் கருதுவதாக சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் எந்தவொரு நிலைகள் மீதும் குண்டு வீசுவற்கு புலிகள் வானூர்திகளைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்து, அதிகாரிகள் கலந்துரையாடவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. நிச்சயமாக இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் புலிகளின் வான்படைப் பலம் பாரதூரமான விடயமல்ல எனவும், சிறிலங்காவில் உள்ள கேந்திர நிலைகளுக்கு அதனை அச்சுறுத்தலாகக் கருதவில்லை எனவும், பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார். புலிகளின் வான் தாக்குதல் பலத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டதுடன், புலிகளின் வான் படைப்பலம் பாரதூரமான அச்சுறுத்தல் அல்ல எனவும் தெரிவித்திருக்கின்றார். புதுடில்லி அவசர ஆலோசனை அதேவேளையில் புலிகள் வசமிருக்கும் ஆயுத வகைகளைப் பொறுத்தவரையில் அணு உலைகளைக் குண்டுவீசித் தாக்கும் சாத்தியமில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். புலிகள் இந்திய அணு உலைகளைத் தாக்கினால், அதனால் முதலாவதாகப் பாதிக்கப்படப் போவது இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியே என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கூறியிருப்பதுடன், புலிகள் இந்திய அணு உலைகளை இலக்குவைப்பார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாததது எனவும், அந்தளவுக்கு புலிகள் மடையர்கள் அல்ல எனவும் தெரிவித்திருக்கின்றார். இதேவேளையில், இந்திய அணுமின் நிலையங்களுக்கு வான்புலிகளால் ஆபத்திருப்பதாக கோகன்ன அறிவித்ததையடுத்து, புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அவசர ஆலோசனை ஒன்று நடத்தப்பட்டது. இந்து சமுத்திரப் பகுதியில் 200 முதல் 300 வரையிலான கடல் மைல் சுற்றளவுக்கு வான் தாக்குதல் நடத்தும் அளவுக்கு புலிகள் வலுப்பெற்றுள்ளனர் எனவும், அதனால் இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியத் துறைமுகங்கள், அணு உலைகளுக்கும் அபாயமிருப்பதாக பாலித கோகன்ன அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த அவசர ஆலேசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தியத் தலைவர் புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் சேகர் தத் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுடன், இந்தியக் கடற்படைத் தளபதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். நன்றி:புதினம்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.