Thursday, May 10, 2007

கஜேந்திரனை கைது செய்யுங்கள்: ஹெல உறுமய

[வியாழக்கிழமை, 10 மே 2007]


நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் கேட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் செ.கஜேந்திரன் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்து தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்தே தேரர் இந்த கூச்சலை எழுப்பியுள்ளார்.

இதனிடையே இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா தெரிவித்துள்ளதாவது:

கஜேந்திரனின் கருத்து மிகவும் பாரதூரமானது. அவர் இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளார். அதாவது விடுதலைப் புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமது வான்படை தமது எதிரிகளின் இலக்குகளையே தாக்குவதாக கூறியுள்ளார். எனவே கஜேந்திரன் யார் சார்பில் பேசியுள்ளார்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலா அல்லது விடுதலைப் புலிகளின் சார்பிலா என பிரதி சாபாநாயகர் கீதாஞ்சன குணவர்தன தெளிவுபடுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்திற்குள் இப்படியான உரைகளை நிகழ்த்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கலாமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக ஆராய்வதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களினது கூட்டத்தை கூட்டும் படி தான் சபாநாயகரை கேட்டுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் பதிலளித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.