Tuesday, May 15, 2007

'விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா தொடர்புகளைப் பேணுவது உபயோகமானது': முன்னாள் அமெரிக்க தூதுவர்.!!

[செவ்வாய்க்கிழமை, 15 மே 2007] "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 2003 ஆம் ஆண்டில் இருந்த நேரடி உறவு விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கையை வளர்த்து அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து விலகி வர வழிவகுத்திருந்தது. அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்கும் அளவுக்கு அது முன்னேற்றமும் அடைந்திருந்தது." 'சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு' என்ற தலைப்பில் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெஃரி லுன்ஸ்ரெட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "2003 ஆம் ஆண்டு ஜுன் மாதம் டோக்கியொவில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்றுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக அவர்களுக்கு அழைப்புக்கள் விடுக்கப்படவில்லை. அந்த மாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்றியிருந்தால் அமெரிக்கா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவு தொடர்புகளையாவது விடுதலைப் புலிகளுடன் பேணி வந்திருக்கும். சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா அளித்துவரும் இராணுவ உதவிகள் தனிப்பட்ட நோக்கத்தை கொண்டதல்ல. விடுதலைப் புலிகள், போரை ஆரம்பித்தால் அதில் அவர்கள் பலனடைய முடியாது என்பதற்கான செய்தியே அது. அதேவேளை, இராணுவ உதவிகள் உட்பட சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் உதவிகள் இராணுவத் தீர்வுக்கான ஊக்குவிப்புக்கள் அல்ல என்பதனையும் அமெரிக்கா, சிறிலங்காவிற்கு தெளிவுபடுத்த முயற்சித்துள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வாக இராணுவத்தீர்வு அமையாது, அரசியல் உத்திகள் வகுக்கப்பட்டு ஒரு அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வைக் காண அரசு முயல வேண்டும் என்பதனை அமெரிக்கா தெளிவுபடுத்தியிருந்தது. சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காது விட்டால், அரசுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவில் அரசியல், சட்டரீதியான தடைகள் அதிகரிக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைதி முயற்சிகளுக்கு தனது இராஜதந்திர, பொருளாதார மற்றும் ஏனைய வழிகளில் அமெரிக்கா எவ்வாறு உதவியுள்ளது என்பதனை தூதுவரின் அறிக்கை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. '2002 இல் இருந்து 2006 வரையில் சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு' என்னும் இந்த ஆய்வு ஆசியா பௌண்டேசன் என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஆசியா முழுவதும் 17 அலுவலகங்களை கொண்டுள்ளது. நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.