Tuesday, May 15, 2007

கிளிநொச்சி மாவட்டம் அரசால் புறக்கணிப்பு: கிளிநொச்சி அரச அதிபர்.

[செவ்வாய்க்கிழமை, 15 மே 2007] கிளிநொச்சி மாவட்டத்தில் 19,319 இடம்பெயர்ந்த குடும்பங்கள் வாழ்வதாகவும், சிறிலங்காப் படையினரின் பொருட் தடையால் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுக்கு முழுமையான வசதிகளை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: "இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை வசதிகளை பெறுவது தொடர்பாகவும், மாவட்டத்தின் தடைப்பட்ட அபிவிருத்திப் பணி தொடர்பாகவும், எரிபொருள் தொடர்பாகவும் அரச செயலகத்தால் சிறிலங்கா அரசிடம் பல தடவை கோரிக்கைகள் விடுத்தும் அவற்றிற்கு இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை. சிறிலங்கா படையினரின் படை நடவடிக்கைகள் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த மக்கள் 46 நலன்புரிநிலயங்களில் 2,701 குடும்பங்களும், வெளியில் 16,618 குடும்பங்களும் வசித்து வருகின்றன. மேலதிக நலன்புரி நிலையங்கள் அமைத்து கொடுக்கமுடியாத காரணத்தால் தான் பெரும்பாலான மக்கள் வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். சிறிலங்காப் படையினரின் தாக்குதலகள் காரணமாக பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது சிறிலங்காப் படையினரின் சீமேந்து தடை போன்றவற்றால் அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராம சேவை பிரிவுகள் உள்ளன. சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இதில் 70 கிராம சேவையாளர் பிரிவுகள்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன" என்றும் வேதநாயகன் தெரிவித்தார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.