Sunday, May 13, 2007

பிரித்தானிய குடியுரிமையைக் கைவிட ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச தயாரா?: ஐ.தே.க.

[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007]


ஈழத் தமிழர்கள் தொடர்பாக விவாதம் நடத்தியமைக்காக பிரித்தானியாவை எதிர்க்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச, தான் வைத்திருக்கும் பிரித்தானிய குடியுரிமையயைக் கைவிட தயாரா? என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது:

பிரித்தானிய தலையீட்டை எதிர்த்துக் குரல் எழுப்புவதோடு தேசப்பற்றுள்ளவர்களாகத் தம்மை அடையாளம் காட்டும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் அவரது பிள்ளைகளும் பிரித்தானிய குடியுரிமையை கைவிடத் தயாரா என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

ஆனால், ஒருபோதும் அவர் அதனைச் செய்ய மாட்டார். ஏனெனில் ஆட்சி மாறினால் நாடு மாற வேண்டும். அதுதான் அவருடைய நிலை.

சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டமை வரவேற்கத்தக்கது. நாம் தவறு செய்யாவிட்டால் இது போன்ற விவாதங்களுக்கு ஏன் அஞ்ச வேண்டும். தைரியமாக முகங்கொடுக்கலாம்.

ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் யுத்த முனைப்பே அனைத்துலக நாடுகள் எமது பிரச்சினை தொடர்பில் தலையீடுகளை அதிகரிக்க வழிவகுத்தது. பிரித்தானியாவையோ, அமெரிக்காவையோ குறைகூற முடியாது. நாம் விட்ட தவறுகளினால்தான் இந்த நிலைமை உருவாகியது.

பிரித்தானியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்துகொண்டு அங்கு தானும் தனது பிள்ளைகளும் சொகுசாக வாழ்வதற்கும், இலவசக் கல்வியைப் பிள்ளைகள் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது பிரித்தானியா ஒரு ஜனநாயக நாடு என்பதனாலேயே என்பதனை ஜே.வி.பி. தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசப்பற்றுள்ளவர் தாம் எனக்கூறி மக்களை ஏமாற்றும் சோமவன்ச அமரசிங்க உண்மையில் அதனை நிரூபிக்க வேண்டும். தனக்கும் பிள்ளைகளுக்கும் கிடைத்துள்ள பிரித்தானிய குடியுரிமைமையக் கைவிட்டு ஏனையவர்களுக்கு அவர் முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்றார் அவர்.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.