[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007] சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானியாவுக்கு அழைத்துப் பேசுவதில் முரண்பாடு ஏதுமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் சில்கொட் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு சில்கொட் அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: சிறிலங்காவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்திருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம். மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும், மீண்டும் முனைப்படைந்திருக்கும் யுத்தமும், சமாதானச் செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கமான நிலையுமே பிரித்தானிய உறுப்பினர்கள் சிறிலங்காவின் பக்கம் தமது கவனத்தைத் திருப்புவதற்கும், கரிசனையுடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கும் காரணமாக இருந்தது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரதிநிதி கீத் வாஸ் தலைமையில் பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறித்து முதல் கட்டத் தகவல்களே இருக்கிறது. முத்தரப்பு மாநாடு குறித்தோ, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நாடடாளுமன்றத்தில் பேச வைப்பது தொடர்பாகவோ இன்னமும் திட்டவட்டமான விவரங்கள் எனக்குத் தெரியவரவில்லை. மேலும், அக்குழுவானது முழுக்க முழுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சி. பிரித்தானிய அரசின் முன்முயற்சியல்ல. இந்த முத்தரப்பு மாநாடு எங்கு நடைபெறவுள்ளது? எந்தெந்த நாடுகளுக்கு இதில் பங்கு கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்? புலிகளின் தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அழைக்கப்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசின் மனோபாவம் எத்தகையது? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமிடத்திலேயே இது குறித்து முடிவு செய்யக்கூடியதாகவிருக்கும். இவ்வாறான ஒரு குழு அமைக்கப்பட்டமை, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையான உறுப்பினர்கள் சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக அடைந்திருக்கும் கவலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அக்கவலை நிவர்த்தி செய்யப்பட வேண்டியதொன்று என்பதும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று என எண்ணுகிறேன். ஆனால், தமிழ்ச்செல்வனையோ புலிகளின் பிரதிநிதிகளையோ, அல்லது தலைவர்களையோ பிரித்தானியாவுக்கு அழைப்பதற்கு முன்னர் இங்கு மோதல்கள் நிறுத்தப்பட்டு சுமூகமான சூழ்நிலை உருவாக வேண்டும். சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளுடனான தொடர்பு ஆதாரமாக இருக்குமிடத்து தமிழ்ச்செல்வனையோ அல்லது புலிகளின் பிரதிநிதிகளையோ பிரித்தானியாவுக்கு அழைத்துப் பேசுவதில் முரண்பாடு இல்லை. பிரித்தானியா, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை விதித்திருக்கின்ற போதிலும் புலிகளுடனான பிரித்தானியாவின் தொடர்பு சமாதானத்துக்கானது என்பதால், அது ஒரு முரண்பாடாக இருக்காது. புலிகளின் பிரதிநிதிகளை எதிர்காலத்தில் பிரித்தானியாவுக்கு அழைத்துப் பேசும் சந்தர்ப்பம் அமையுமானால் இது சிறிலங்காவின் சமாதான செயற்பாடுகளில் பிரித்தானியா முன்னேறியுள்ளது, அல்லது சமாதான செயற்பாடுகளில் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது என்பதே அர்த்தம். ஆனால், புலிகளின் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும் முன்னர் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கும் அதன்மூலமான தீர்வுக்கும் அனைத்துத் தரப்பினதும் அர்ப்பணிப்பு தேவை. அதனை ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கு முன்னர் புலிகளுக்கு அழைப்பு விடுப்பது உகந்ததல்ல. மேலும் விடுதலைப் புலிகளும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தமது ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார் அவர். நன்றி:புதினம்
Sunday, May 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.