Wednesday, May 02, 2007

குமரி மீனவர்கள் படுகொலை விவகாரம்- தி.மு.க. அரசைக் கலைக்க நினைக்கும் சக்திகளின் சதி: தொல். திருமாவளவன்.

[புதன்கிழமை, 2 மே 2007]


கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்துவதில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சில சக்திகளின் சதியும் நிர்ப்பதங்களும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "மீனவ தமிழர் பாதுகாப்பு" மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது:

இலங்கையில் வான்வழியாக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி உலக சாதனை படைத்துள்ளனர். இஸ்ரேல் விமானத்தையும் அவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எந்த இயக்கமும் விடுதலைப் புலிகளை போல் நீண்ட போர் வரலாறு கொண்டதாக இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். வான்வழித் தாக்குதல் மூலம் இனி தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் மூக்கை நுழைக்க முடியாது.

தமிழக மீனவர்களை கடல்புலிகள் கொன்று விட்டதாக கூறப்படுகிறது. கடல் எல்லைகளில் தமிழக மீனவர்கள் பயமில்லாமல் மீன் பிடிப்பதற்கு கடல்புலிகள்தான் காரணம். கடந்த 25 ஆண்டு வரலாற்றை பார்த்தால் அது தெரியும். கடற்புலிகள் இல்லாவிட்டால் திருகோணமலையில் அமெரிக்கா தனது இராணுவத் தளத்தை அமைத்து இருக்கும். இது இந்தியாவுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும்.

தமிழக மீனவர்களை கடல்புலிகள் கொன்றதாக கூறப்படுவதில் சதி இருக்கிறது. நிர்ப்பந்தம் காரணமாக இப்படி கூறப்பட்டு உள்ளது. சில சக்திகள் ஒன்று சேர்ந்து தி.மு.க. அரசைக் கலைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு தமிழனும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி இந்த விவகாரத்தில் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை. அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுகளை அவர்கள் வீசவில்லை. ஈழப் போருக்கு தடையாக இந்திய அரசு இருக்கக் கூடாது. இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் படகுகள் இலங்கைக்குச் செல்லும் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார் கூறினார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் தயாராக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மூலம் முதலில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார் அவர்.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.