Wednesday, April 04, 2007

மூன்று மாதத்தில் யாழில் 67 பேர் படுகொலை- 68 பேரை காணவில்லை- 29 பேர் கடத்தல்.!!!

[புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007] கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் 67 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 68 பேரை காணவில்லை, 29 பேர் கடத்தப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் உள்ள சட்ட ஒழுங்கை நிலை நாட்டுபவர்களிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பின்வரும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் ஜனவரி மாதம் 20 பேரும், பெப்ரவரி மாதம் 8 பேரும், மார்ச் மாதம் 39 பேருமாக 67 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளாலும், சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களினாலும் ஜனவரி மாதம் 10 பேரும், மார்ச்சில் 19 பேருமாக 29 பேர் கடத்தப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் 20 பேரும், பெப்ரவரி மாதம் 31 பேரும், மார்ச் மாதம் 17 பேருமாக மொத்தம் 68 பேர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள் தமது சொந்த விடயங்கள் அல்லது வியாபார நோக்கங்களுக்காக தமது இல்லங்களில் இருந்து வெளியில் சென்ற வேளைகளில் காணாமல் போய் உள்ளனர். இதனிடையே தமக்கு சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களினாலும் கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக 18 பேர் யாழில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கின்றனர். இந்த மூன்று மாத காலத்தில் கொல்லப்பட்டவர்களின் இரு சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவை யாழ். போதனா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தரவுகளில் மனித உரிமை ஆணைக்குழுவின் பதவிகளில் சிறிலங்கா இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் உள்ளடக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.