Thursday, March 08, 2007

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா கடும் தாக்குதல்.

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007]

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கடந்த வருடம் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன் குறிப்பாக போர் நிறுத்தம் முறிவடைந்தது மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான தாக்குதலின் பின்னர் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளும் தொழிலாளர்களுக்குமான அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் சிறிலங்காவில் 'மனித உரிமை செயற்பாடுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 15 பக்க அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"சிறிலங்கா அரசாங்கத்தின் துணை அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான கொலைகள், அடையாளம் தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்படும் உயர் அதிகாரிகளின் கொலைகள், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடைய துணை இராணுவக் குழுக்களினாலும், விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்படும் அரசியல் கொலைகள், காணாமல் போதல் என்பன மனித உரிமை மீறல்களாகும்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்தல், தடுத்து வைத்தல், வசதி குறைந்த சிறைச்சாலைகள், நீதியான பொது விசாரணைக்கு மறுத்தல், அரசின் ஊழல், சுதந்திரமான பயணங்களுக்கான தடை, மதங்களின் சுதந்திரத்தின் மீதான மீறல்கள், போக்குவரத்து சுதந்திரத்தை மீறுதல், கண்காணிப்பாளர்கள் மீதான பாகுபாடுகள் என்பன தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அரசாங்க படைகளுடன் தொடர்புடைய துணை இராணுவக்குழுவினர் பெருமளவான தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றில் பொதுமக்களின் மீதான தாக்குதல்களும் அடங்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் அரசாங்கம் அவசரகாலச் சட்ட விதிகளை பலப்படுத்தியுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுகள் இன்றி கைது செய்வது, எண்ணுக்கணக்கற்ற பொதுமக்களை 12 மாதங்கள் வரை தடுப்புக்காவலில் வைப்பது போன்ற அதிக அதிகாரங்களை படையினருக்கு வழங்கியுள்ளது.

ஊடகங்களின் தகவல்களின் படி கடந்த வருடம் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல், ஊர்காவற்துறையில் பொதுமக்கள் மீதான படுகொலை, பேசாலைத் தாக்குதல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான திருகோணமலை மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான விமானக்குண்டு வீச்சில் 50 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதும், 200 மக்கள் காயமடைந்ததும் அடங்கும்.

விடுதலைப் புலிகள் வடக்கு - கிழக்கில் அதிகளவான பிரதேசங்களை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், தற்கொலைத் தாக்குதல்கள், கைது செய்தல், தடுத்து வைத்தல், சிறார் படைச் சேர்ப்பு, நீதியான விசாரணைகளுக்கு மறுத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

கடந்த வருடம் விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய குழுக்களின் வன்முறைகளாக இராணுவ தலைமையகம் மீதான தாக்குதல், ஜெனரல் பாரமி குலதுங்கவின் கொலை, கேதீஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் மீதான தாக்குதல் என்பவற்றை குறிப்பிடலாம்.

அரசாங்கத்தினாலும், அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் துணை இராணுவக்குழுவினாலும், விடுதலைப் புலிகளினாலும் 345 பேர் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக கடந்த வருடம் பலர் காணாமல் போயுள்ளதாக சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வருட முடிவில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்க படையினரால் காணாமல் போனவர்கள் தொடர்பாக 16,305 முறைப்பாடுகளை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றில் சில முறைப்பாடுகள் இருபது வருடங்களாக தேங்கிக்கிடக்கின்றன. இப்படியாக கடந்த காலங்களில் காணாமல் போனது தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது விசாரணைகளோ, தண்டனைகளோ கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சிறிலங்காவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு எனப்படும் ஹியூமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பு உட்பட பல முன்னனி மனித உரிமை அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.