Friday, March 16, 2007

'இலங்கையில் மனித உரிமை அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்': ஐ.நா

[வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2007] "இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு லூயிஸ் ஆபர் உரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அனைத்துலக சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் கேள்விக்கு பதிலளித்த போதே லூயிஸ் ஆபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கேள்விக்கு அரசாங்கம், விசாரணை ஆணைக் குழுக்களை அமைத்துள்ளதாகவும், அனைத்துலக நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எமது அமைப்பு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுடன் மிகக் கடுமையாக செயலாற்ற உள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் நாம் பங்குபற்றுவோம். நாம் அங்கு நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை அடைந்துள்ளோம். இருந்த போதும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றங்களையும் இலங்கையில் காணமுடியவில்லை. கடத்தல்களும், இடம்பெயர்வுகளும் தொடர்கின்றன எனவே நாம் அங்கு எமது பிராந்திய அலுவலகத்தை அமைக்க எண்ணியுள்ளோம்" என்றார் அவர். மேலும் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதில் பலத்த குறைபாடுகள் நிலவுவதாகவும், எனவே அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ள கருத்தையும் ஆபர் கருத்தில் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.