Friday, March 30, 2007

மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சு: 9 பொதுமக்கள் பலி

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007]

சிறிலங்காப் படையினரால் முறக்கொட்டாஞ்சேனை முகாமில் இருந்து 10 கிலோ மீற்றர் தென்மேற்காக உள்ள சித்தாண்டி 3 ஆம் வட்டாரம் மீது நடத்திய எறிகணை தாக்குதலில் 4 சிறார்கள் உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2 வயது நிரம்பிய 2 பெண் குழந்தைகளும், 18 வயதிற்கு கீழ்ப்பட்ட 2 சிறார்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். இதில் மூன்று சிறார்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சிறிலங்காவின் காவல்துறையினரோ அல்லது படையினரோ சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்றுவரை செல்லவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் கடந்த 21 ஆம் நாள் இராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இந்த எறிகணை வீச்சை படையினர் நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் சித்தாண்டிப் பகுதியில் இருந்து இராணுவ நிலைகளை நோக்கி மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தவில்லை என அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் வாழ்விடங்களை நோக்கி 6 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும் இதில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லம் தவமணி (வயது 30), அவரது 2 வயதுக் குழந்தை நல்லம் நிரோஜா, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறார்களான பேரின்பராஜா ரஞ்சிதா (வயது 2), பேரின்பராஜா சசிகுமார் (வயது 15), பேரின்பராஜா வசந்தகுமார் (வயது 18), அழகையா விஜயலக்ஸ்மி (வயது 42), நானமணி தம்பித்துரை (வயது 42), இளையதம்பி சின்னத்துரை (வயது 50) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையெ இராணுவமும் விடுதலைப் புலிகளும் நேற்று வியாழக்கிழமை இரவும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.