Monday, February 19, 2007

மங்கள சமரவீரவின் கருத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள்.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]


யாழ். குடாநாட்டிலும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் சீருடையினராலும், இனந் தெரியாத குழுவினராலும் ஆள்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்படல் மற்றும் காணா மற்போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட்டுமட்டின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொடூரத்தின் பேரச்சத்தில் தமிழர் தாயகம் மூழ்கிக் கிடக்கின்றது.

இந்த மனிதப் பேரவல நிலை இப்போது மிக மோசமான கட்டத்தை அடைந்தமைக்கு அரச பயங்கரவாதம், புதிய ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தின்கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டமையே பிரதான காரணம் என்பதைத் தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது.
கடந்த வாரம்வரை ராஜபக்ஷவின் அரசில் மூத்த முக்கியஅமைச்சராக இருந்த மங்கள சமரவீர இப்போது வெளியிட்டிருக்கும் கருத்து இவ்விடயத்தில் உண்மை என்னவென்பதை ஓரளவேனும் ஊகிக்கக்கூடிய வாய்ப்பைத் தந்திருக்கின்றது.
தமக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமாகவும், விவரமாகவும், பகிரங்கமாகவும் பதிலளித்திருக்கின்றார். அந்தப் பதிலில் அவர் தெரிவித்த சில பகுதிகள் கவனிக்கத்தக்கவை.

""நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயம், இருபத்தைந்து நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனினால் புலிகளைத் தடைசெய்ய வைத்தேன். இதற்காக மிகக் கடுமையாக நான் உழைத்தேன். ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய யூனியன் புலிகளைத் தடைசெய்யும் தீர்மானத்தை எடுத்தாலும், அந்த யூனியனில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும், அதற்கான சட்ட வலிமையை அளிக்கும் சட்டங்களைத் தத்தமது நாடுகளில் தனித்தனியாக உருவாக்கிக் கொண்டால்தான் புலிகள் மீதான தடை முழு அளவில் அங்கு நடைமுறைக்கு வரமுடியும். ஆகையினால், அச்சட்டங்கள் அந்த நாடுகளில் உருவாக்கப்படும் வரையாவது நமது தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளின் போதும் சரி மனித உரிமை மீறல்கள், ஆள்கடத்தல்கள், ஊடகங்களைத் தொல்லைப்படுத்துதல், வழிபாட்டு இடங்களைத் தாக்குதல், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் அவசரமாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

ஜனாதிபதியாகிய உங்களிடமும், உங்களின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான உங்கள் சகோதரரிடமும் இந்த வேண்டுகோளை நான் முன்வைத்தேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலமளித்திருக்கின்றார் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர.

இந்தக் கருத்தினூடாக சில விடயங்களை அவர் சொல்லாமல் சொல்லுகின்றார் வெளிப்படுத்துகின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

* ஆள்கடத்தல்கள், ஊடகங்களைத் தொல் லைப்படுத்துதல், வழிபாட்டு இடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்றவை தாக்கப்படுதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் அரசுத் தரப்புடன் சம்பந்தப்பட்டு இடம்பெறுகின்றன.

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளைத் தடைசெய்யும் சட்டங்களை நிறைவேற்றும்வரை இந்த மனித உரிமைகள் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறவில்லை என்று வெளிப் பகட்டுக்குக் காட்டும் எத்தனப் போக்கு அரசுத் தரப்பில் இருந்தது.

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளைத் தடைசெய்யும் சட்டங்களைத் தத்தமது நாடுகளில் நிறைவேற்றும் வரையாவது இந்த மனித உரிமை மீறல்களை நிறுத்தும்படி அரசின் மூத்த அமைச்சர் அரசைக் கோரியிருப்பதால், இத்தகைய சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தபின்னர், இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தாராளமாக மேற்கொள்ளலாம் என்ற மனப்பாங்கே அரச மேலிடத்தில் காணப்பட்டது.

மங்களவின் மேற்படி கருத்திலும், தகவலிலும் இந்த உள்ளார்ந்த அம்சங்களே தொக்கி நிற்கின்றன.

இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்களில் அரசுக்கும் அதன் படைகளுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் இத்தகைய மனித உரிமை மீறல்கள் இடம்பெறவே இல்லை என்றும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டுவதற்கு அரசு கங்கணம் கட்டியிருக்கும் இந்தச் சமயத்திலேயே இவ்வளவு மோசமாக தமிழர் விரோத அரச பயங்கரவாதம் மோசமான மனித உரிமைகளைச் செய்து வருகின்றது.

அப்படியானால் புலிகளைத் தடைசெய்வதற்குக் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு முடிவெடுத்த ஐரோப்பிய ஒன்றிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் புதிய சட்டங்களைத் தத்தமது நாட்டில் நிறைவேற்றிக் கொள்ளுமாயின்
அதன் பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் எவ்வளவு மோசமாக அரங்கேறும் என்பது நினைத்துப் பார்க்கப் பேரச்சம் தருவதாக உள்ளது.

இத்தகவல்கள் அனைத்தும் புலிகளைத் தடைசெய்யும் தீர்மானத்தை எடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுக்குச் சமர்ப்பணம்.