Thursday, September 26, 2013

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து மரணம்


தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆதித்தமிழர் பேரவையில் இணைந்து போராடிவந்த தோழர் பழ. நீலவேந்தன் தீக்குளித்து மரணித்துள்ள செய்தி தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் தோழர் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு பெரும்பங்கு.
ஈழ விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தோழர் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார்.
கோவை, திருப்பூர் மாவட்டம் என்றில்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தமது அனல் கக்கும் பேச்சால் தமிழ் மக்கள் பிரச்சினையை அனைவருக்கும் கொண்டு சென்றவர்.
தமிழகத்திலுள்ள அமைப்புகள் அம்பேத்கரையும், பெரியாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதைப்போல எனது தலைவர்கள் அண்ணன் கொளத்தூர் மணியும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களும் ஆவார் என்று எப்பொழுதும் கூறுவார்.
தங்கள் வாழ்வாதாரத்திற்கே தமிழகத்தில் நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அருந்ததியர் மக்களை தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுத்தியதில் பெரும்பங்கு தோழர் பழ..நீலவேந்தனுக்கே உண்டு.
"அருந்ததியினருக்க்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை.  படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும், சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன்." என்று நீலவேந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட மருத்துவமனை அனைத்துக் கட்சி, அமைப்புத்தோழர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் சக்தியை இந்த சமூகம் மறுபடியும் இழந்திருக்கிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.