Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Sunday, August 04, 2013

இருள் நிறைந்திருக்கும் பாதையின் ஒளிவீச்சு - ச.ச.முத்து

ஆகஸ்ட் 4, 1987..முன்னறிவித்தல் ஒன்றுடன் அவர் மக்கள்முன் தோன்றியது அன்றுதான்.அதுவும் மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில்.தமிழீழத்தின் ஒரு முக்கியபகுதியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுமான வடமராச்சி மீது சற்றுமுன் சில வாரங்களுக்குமுன்னர் தான் சிங்களமுப்படைகளும் பாரிய ஒரு இராணுவநடவடிக்கையை நடாத்தி பலபகுதிகளை கைப்பற்றி இருந்தன.

பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இது எல்லாவற்றையும்விட இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருந்த பொழுதில்
தான் தமிழர்களின் வரலாற்றில் முதன்முறையான தற்கொடைத்தாக்குதல் மில்லரால் நிகழ்த்தப்பட்டு சிங்களபடைகள் முடங்கிகிடந்தகாலம் அது. பெரும் எண்ணிக்கையிலான சிங்களபடைகள் ஒரு பெரும்பொறிக்குள் மாட்டிக்கொண்டதான நிலை திடீரென ஏற்பட்டது.

இந்த பின்னணியில்தான் இந்திய-லங்கா ஒப்பந்தம் இந்தியபிரதமர் ராஜிவ்காந்தியாலும் சிங்களதேச அதிபர் ஜெயவர்த்தனாவாலும் ஒப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்து லட்சம் இந்தியபடையினர் கனரகவாகனங்களுடன் தமிழர் பகுதிகளில் வந்திறங்கி நிலை கொண்டனர். தமிழ்மக்களின் ஒப்புதல் ஏதும் இன்றி,சம்மதம் இல்லாமல் இரண்டு அதிபர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் தமிழ்மக்களின் அபிலாசைகள் எதனையும் தமிழ்மக்களின் அர்ப்பணம் நிறைந்த போராட்டத்துக்கு உரிய தீர்வு எதனையும் முன்வைத்திருக்கவில்லை.

இவை எல்லாவற்றையும்விட தமிழர்களின் விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஏந்திய ஆயுதங்களை விடுதலைப்புலிகள் ஒப்படைக்கவேண்டும் என்று 72மணிநேர அவகாசம் வேறு.
இத்தகைய ஒரு சம்பவங்களின் பின்ணணியிலேயே ஓகஸ்ட் 4ம்திகதிய சுதுமலைகூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் இவ்வளவு திரளான தமிழீழமக்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததாக குறிப்புகள் எதுவும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள்.
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர்கள்,தளபதிகள் எல்லோரும் பேசினார்கள்.
எல்லோருடைய பேச்சின் முடிவிலும் அவர்கள் ஒன்றைகுறிப்பிட தவறவில்லை. தலைவர் எமது அமைப்பின் முடிவை அறிவிப்பார் என்பதே அதுவாகும்.

உண்மையில் மிக முக்கியமான சரித்திரபொழுது அது. விடுதலைப்புலிகள் ஆயுதஒப்படைப்பை நிராகரித்து இந்தியபடைகளுடன் மோதுவார்கள் என்று நரித்தனமான கனவுகளில் திளைத்துக்கொண்டிருந்த சிங்களதேச அதிபர் ஜெயவர்த்தனவாவும் சிங்களபேரினவாதமும் ஒருபுறம்.
இலங்கைபிரிவுபடுவதை இத்துடன் தடுத்துவிடலாம் என்ற நினைப்பில் வந்திறங்கி நின்ற இந்திய மேலாதிக்கம் மறுபுறம்.

இந்த ஒப்பந்தத்தை தமிழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் எப்படி பார்க்கின்றார்கள் என்று உற்றுக்கவனித்துக்கொண்டிருந்த சர்வதேசம் இன்னொருபுறம்.
இவற்றுக்கு நடுவிலேதான் அந்த வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த சுதுமலைப்பிரகடனத்தை நிகழ்த்த தலைவர் ஒலிவாங்கிக்கு முன் வருகிறார். தேசியத்தலைவரின் உரையில் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் சிங்களஅரசுக்குமான பதில்கள் இருந்தாலும் உண்மையில் அந்த உரை எமது மக்களை நோக்கியதாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

இந்தியா எங்களை எப்படியாவது காப்பாற்றும் என்ற நம்பிக்கை அப்போது கூடுதலான தமிழர்களிடம் நிறைந்திருந்தது. ஒரு பெரும்கனவு இந்தியா மீது இருந்தது. சரித்திரகாலம்தொட்டு இருந்த உறவுகளும் சிங்கள துட்டகைமுனுக்களுக்கு தமிழ்மன்னர்கள் மீதிருந்த பயமும் வெறுப்பும் தமிழர்களுக்கு இந்தியா தமது ஆபத்பாந்தவன் என்ற நினைப்பை இயல்பாகவே தோன்றுவித்திருந்தது
எங்களுக்கு அருகில் இருக்கும் பிரமாண்ட நிலப்பரப்பு கொண்ட தேசம்,எங்களுடன் .தொப்புழ்கொடி உறவுகளையும்,கலாச்சார தொடுப்புகளையும் கொண்டிருந்த தேசம் .எமது எதிரியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எங்களை காப்பாற்று வதற்காகவே என்று  எமது மக்கள் ஆழமாக நம்பினார்கள்.

கனரகஆயுதங்களுடனும்,டாங்கிகளுடனும் எமது செம்மண் தோட்டங்களை உழுதுகொண்டுவந்த பாரததேசபடையை எமது மக்கள் காக்கும் தேவர்களாகவே நினைத்து வரவேற்பு அளித்தனர்.மாலை அணிவித்தனர். பதினைந்துவருடத்து விடுதலைப்போராட்டம் மோசமான முறையில் கருவறுக்கப்படும் அபாயம் புரியாமலேயே மக்கள் பாரதபடையை நோக்கினர். இலங்கைத்தீவு என்ற ஒற்றைஆட்சிக்குள் தமிழரின் உரிமைகளை பேரம்பேசவே இந்தியபடைகள் வந்து இறங்கி இருக்கின்றன என்று முழுதாக புரியாமல் எமது மக்கள் இருந்தவேளையிலேயே அந்த வரலாற்றுப்புகழ்மிக்க உரை மக்களுக்கு முன்பாக வருகின்றது.

மிகவும்ஆணித்தரமான குரல்,அடிமனதையும் அசைத்துவிடும் உறுதிநிறைந்த குரலில் மிகவும் இலகுவான வார்த்தைகளில் எல்லோருக்கும் புரியும்படியான சொற்களில் அந்த உரை ஆரம்பித்தது.எனது அன்புக்குரிய தமிழீழமக்களே என்று ஆரம்பித்த அந்த உரை மிகத்தெளிவாகவே மக்களுக்குள் உள் நுழைந்து எமது விடுதலையை வேறுஎவரும் எடுத்துத்தரவே போவது இல்லை என்ற உண்மையை உறைக்கச்சொன்னது.
அதுவரை இந்திய ஒப்பந்தத்தை ஏதோ தமிழர்களை காப்பாற்றப் போகும்  ஒரே மார்க்கம் என்று நம்பிக்கொணடிருந்தவர்களின் கண்களை திறக்கவைத்து பாரதப்படைகள் வந்து இறங்கிநிற்பது சிங்களதேசத்தை காப்பாற்றவே என்ற எண்ணத்தை முதன்முதலில் புரியவைத்தது.

அந்த உரைமுழுவதும் எமது மக்களின் பாதுகாப்பு, அதற்கான உத்தரவாதம் என்பதுபற்றியே திரும்பத்திரும்ப வலியுறுத்தியது. இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமாகவோ தமிழ்மக்களின் போராட்டசக்தியின் ஒப்புதலுடனோ
செய்யப்படவே இல்லை என்பதை மிகத்தெளிவாக தலைவர் கூறியது ஒப்பந்தத்தின் உண்மைமுகத்தை தோல்உரித்து க்காட்டியது.

உரையின் இறுதியில் அவர்தெளிவான தனது குரலில் எந்தவித தடுமாற்றமும் இன்றி அறிவித்தார். 'இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வு எதையும் தந்துவிடபோவதில்லை. சிங்களபேரியவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழும்காலம் வெகு தொலைவில் இல்லை' என்றார் தேசியததலைவர்.

அவர் தொடர்ந்து 'ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரே தீர்வாக சுதந்திரதமிழீழமே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.சுதந்திரதமிழீழ தேசத்தை அடையும் போராட்டத்தில் நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்று மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.' என்று ஆழமான உறுதியுடன் கூறிவிட்டு'போராட்டவடிவங்கள் மாறலாம்.ஆனால் போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறாது' என்ற வரலாற்று வீரியம் நிறைந்த வசனத்தையும் கூறினார்.

உரையின் மிகமிக இறுதி வசனமாக 'நான் இந்த தேர்தல்களில் போட்டியிடப் போவதோ முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை' என்று கூறியதன் மூலம் தமிழீழத்துக்கான தனது போராட்டம் ஒருபோதும் ஓயாது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த உரை நிகழ்த்தப்படாமல் விடப்பட்டிருந்தால் எமது மக்களுக்கு இந்தியாவின் கபடநோக்கம் தெரியவர நீண்டகாலம் ஆகிவிட்டிருக்கும்.அதற்கிடையில் தமிழர்களின் விடுதலை இலட்சியம் கருவறுக்கப்பட்டிருக்கும். இந்த உரை மக்களை சிந்திக்கதூண்டியது.ஏதோஒரு பிழையான நோக்கத்துடன்தான் பாரதபடைகள் வந்து இறங்கி நிற்கிறார்கள் என்ற முதற்பொறியை இது ஏற்படுத்தியது.

தேசியத்தலைவரின் சுதுமலைப்பேச்சு என்பது பல விடயங்களில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தியஉரை. ராஜிவ்காந்தியுடன் ராஜதந்திரநரியான ஜெயவர்த்தனா செய்துகொண்ட ஒப்பந்தம் சிங்கள நலனுக்கானதுதான். அது தமிழர்களுக்கு எதுவும் தரப்போவ தில்லை என்று கண்களை திறந்த உரை அது.

மிகவும் தெளிவான குரலில் எந்தவித பிசிறும்,ஐயமும் இன்றி ஆற்றப்பட்ட உறுதிநிறைந்த அந்த உரையின்
'போராட்டவடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது' என்ற குரல்
என்றும் என்றும் எமக்கான பாதையை அடையாளம் காட்டியபடியே நீளும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.